கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
எழுச்சி பெற்ற வடகிழக்குடன் புதிய பாரதம் உதயமாகிறது: மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால்
Posted On:
23 MAY 2025 8:41PM by PIB Chennai
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், வடகிழக்கு இந்தியாவின் முன் எப்போதும் இல்லாத வளர்ச்சித் திறனை ஆராயுமாறு, இன்று உலகளாவிய மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற முன்னேறும் வடகிழக்கு முதலீட்டாளர் உச்சிமாநாட்டில் பேசிய திரு சோனோவால், "புதிய பாரதம், அதன் மையத்தில் ஒரு எழுச்சி பெற்ற வடகிழக்குடன் விடிந்து கொண்டிருக்கிறது" என்று கூறினார்.
"வடகிழக்கு உள்கட்டமைப்பிற்கான மூலதனத்தை வெளிக்கொணர்தல்" என்ற உச்சிமாநாட்டின் கருப்பொருள் சார்ந்த விவாத தலைப்பில் உரையாற்றிய திரு சோனோவால், கடந்த பத்தாண்டுகளில் வடகிழக்குப் பிராந்தியத்தின் மாற்றத்தை எடுத்துரைத்தார், இந்த மறுமலர்ச்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடியின் நிலையான தலைமையே காரணம் என்று கூறினார்.
"பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், வடகிழக்கு ஒரு சகாப்தத்தை வரையறுக்கும் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. ஒரு காலத்தில் தொலைதூரமாகவும், தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கருதப்பட்டவை இப்போது தென்கிழக்கு ஆசியாவிற்கான இந்தியாவின் நுழைவாயிலாக வேகமாக மாறி வருகின்றன," என்று திரு சோனோவால் கூறினார். "இந்தப் பகுதி, இந்தியாவின் வளர்ச்சிக் கதையின் ஒரு பகுதி மட்டுமல்ல, இப்போது அதில் ஒரு முக்கிய அத்தியாயமாகவும் விளங்குகிறது."
கடந்த பத்தாண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களுக்கு 700க்கும் மேற்பட்ட முறைகள் மத்திய அமைச்சர்கள் பயணம் மேற்கொண்டதை திரு சோனோவால் சுட்டிக்காட்டினார். இது, பிராந்தியத்தின் வளர்ச்சியில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதற்கு சான்றாகும். குறிப்பாக கடல்சார் மற்றும் உள்நாட்டு நீர்வழிகளில், உள்ளடக்கிய உள்கட்டமைப்புக்கான அரசின் உறுதிப்பாட்டை திரு சோனோவால் வலியுறுத்தினார். இவை பிராந்தியத்தின் பொருளாதார சூழலை மறுவடிவமைக்கின்றன.
“உள்நாட்டு நீர்வழிகள், வடகிழக்கு மாநிலத்திற்கான வளர்ச்சியின் மிகவும் நம்பிக்கைக்குரிய எல்லைகளில் ஒன்றாகும்,” என்று திரு சோனோவால் கூறினார். “இப்போது பிராந்தியத்தில் 20க்கும் மேற்பட்ட அறிவிக்கப்பட்ட தேசிய நீர்வழிகள் உள்ளன. பல்முனை இணைப்பை ஊக்குவிக்கவும், தளவாட மையங்களை உருவாக்கவும், சரக்கு இயக்கத்தை அதிகரிக்கவும் ஜல்வஹாக் திட்டம் ஊக்குவிக்கப்படுகிறது. இந்த நீர்வழிகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு பொருளாதார நடவடிக்கைகளின் புதிய பாதைகளுக்கு வித்திடும் மற்றும் பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கும்”, என்றார் அவர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2130873
***
(Release ID: 2130873)
SG/RB/DL
(Release ID: 2130905)