பாதுகாப்பு அமைச்சகம்
பாரம்பரிய முறைப்படி பலகைகளால் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள பாய்மரக்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்படவுள்ளது
Posted On:
20 MAY 2025 11:31AM by PIB Chennai
பாரம்பரிய முறைப்படி பலகைகளால் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள பாய்மரக்கப்பல் 2025 மே 21 அன்று கார்வாரில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய கடற்படையில் இணைக்கப்படவுள்ளதுடன், பெயர் பலகையும் திறக்கப்படவுள்ளது. மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை விருந்தினராக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இந்த கப்பலை முறைப்படி இந்திய கடற்படையில் இணைப்பார்.
அஜந்தா குகைகளில் உள்ள ஓவியங்களால் ஈர்க்கப்பட்டு பொது சகாப்தம் 5-ம் நூற்றாண்டின் பாய்மரக்கப்பல் வடிவில் இது மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய கலாச்சரத்துறை, இந்திய கடற்படை, ஹோடி இன்னவேஷன்ஸ் நிறுவனம் ஆகியவற்றிற்கிடையே 2023 ஜூலையில் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு இந்தக் கப்பல் கட்டுமானப்பணி முறைப்படி தொடங்கியது. இதற்கு மத்திய கலாச்சாரத்துறை நிதி வழங்கியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த கப்பல் வடிவமைப்பாளர் திரு பாபு சங்கரன் தலைமையிலான கைவினைஞர்களால் கச்சாப் பொருட்கள் தெரிவு செய்யப்பட்டு முழுவதும் பாரம்பரிய முறைகளில் பலகைகளால் இந்தக் கப்பல் கட்டுமானம் நடந்து முடிந்துள்ளது. ஆணிகள் இல்லாமல் ஆயிரக்கணக்கான பலகைகளை ஒன்றிணைத்து இந்தக் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. 2025 பிப்ரவரியில் கோவாவில் உள்ள கோடி கப்பல்கட்டும் தளத்தில் இதன் வெள்ளோட்டம் நடைபெற்றது.
கடலில் கப்பலின் நீர் இயக்கப்போக்கை சரிபார்க்கும் மாதிரி சோதனையை மேற்கொள்ள இந்தியக் கடற்படை, சென்னை ஐஐடியின் கடல்சார் பொறியியல் துறையுடன் இணைந்து செயல்பட்டது. மேலும், சமகாலப் பொருட்களைப் பயன்படுத்தாமல் வடிவமைத்து, கட்டமைக்கப்பட்ட மரக் கம்பு அமைப்பை மதிப்பிடுவதற்கு இந்திய கடற்படை ஓர் உள்கட்டமைப்பு பகுப்பாய்வை மேற்கொண்டது. கப்பலின் ஒவ்வொரு அம்சமும் வரலாற்று தன்மையையும், கடல்சார் தகுதியையும் சமநிலைப்படுத்த வேண்டியிருந்தது. இது புதுமையான மற்றும் பண்டைய இந்தியாவின் கடல்சார் மரபுகளுக்கு உண்மையாக இருக்கும் வடிவமைப்புத் தெரிவுகளுக்கு வழிவகுத்தது.
இந்தப் பாய்மரக்கப்பல் குஜராத்திலிருந்து ஓமனுக்கு கடற்பயணத்தை மேற்கொள்வதற்கான தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பாய்மரக்கப்பலின் கட்டுமானம் இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை உறுதிசெய்வதோடு, உயிர்ப்புடன் இருக்கும் அதன் மரபுகளை பாதுகாத்து செயல்படுத்த இந்திய கடற்படை உறுதிபூண்டிருப்பதையும் பிரதிபலிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2129794
***
SM/SMB/AG/KR
(Release ID: 2129846)