வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியாவில் பருவநிலை-தொழில்நுட்ப தொழில்முனைவோரை ஊக்குவிக்க, ஜிஇஏபிபி-யுடன் டிபிஐஐடி இணைந்துள்ளது
Posted On:
17 MAY 2025 9:58AM by PIB Chennai
இந்தியாவில் தூய்மையான எரிசக்தி, உற்பத்தித் துறைகளில் புதுமை, பருவநிலை நிலைத்தன்மைசார்ந்த தொழில் முனைவு ஆகியவற்றுக்காக, தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையான டிபிஐஐடி (DPIIT), மக்கள் மற்றும் பூமிக்கான உலகளாவிய எரிசக்தி கூட்டணியான ஜிஇஏபிபி-யுடன் (GEAPP) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
நிலைத்தன்மைக்கான ஊக்கத்துடன் கூடிய இந்த இரண்டு ஆண்டு ஒத்துழைப்பு என்பது நிதி அணுகல், வழிகாட்டுதல், முதன்மை வாய்ப்புகள், சந்தை இணைப்புகள் ஆகியவற்றின் மூலம் ஆரம்ப கட்ட பருவநிலை-தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும். இந்த முயற்சி இந்தியாவின் நிகர-பூஜ்ஜிய உமிழ்வு என்ற லட்சியங்களுடன் இணைந்த முதலீட்டு முயற்சிகளை வலுப்படுத்த முயல்கிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஜிஇஏபிபி அமைப்பானது எரிசக்தி மாற்றங்கள் தொடர்பான புதுமை சவாலை (ENTICE) தொடங்கும். இது அதிகப் பலன்களை ஏற்படுத்தும் தீர்வுகளுக்கு 500,000 டாலர் வரை பரிசுகளை வழங்கும் ஒரு போட்டி தளமாகும். ஸ்பெக்ட்ரம் இம்பாக்ட், அவனா கேபிடல் போன்ற கூட்டு நிறுவனங்கள் மூலம் முதலீட்டு ஆதரவும் எளிதாக்கப்படும். டிபிஐஐடி இந்த திட்டத்தை ஸ்டார்ட்அப் இந்தியா முயற்சியுடன் இணைத்து, முக்கிய அரசுத் திட்டங்கள் மூலம் மக்களை சென்றடையும்.
டிபிஐஐடி-யின் இணைச் செயலாளர் திரு சஞ்சீவ் பேசுகையில், நாட்டின் நீண்டகால நிகர-பூஜ்ஜிய உமிழ்வு நோக்கங்களை ஆதரிக்கும் தொழில்நுட்பங்களை உருவாக்க, தூய எரிசக்தி தொடர்பான புத்தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்கும் என்றார்.
ஜிஇஏபிபி-யின் இந்திய பிரிவுத் துணைத் தலைவர் திரு சௌரப் குமார் பேசுகையில், தொழில் துறை, அரசு, புதுமைக் கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோருக்கு இடையிலான ஒத்துழைப்பு மூலம் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது என்று கூறினார். இரு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
***
TS/PLM/DL
(Release ID: 2129289)