நிதி அமைச்சகம்
உலகளவில் மதிப்புமிக்க கடன் மதிப்பீட்டு முகாமையான மார்னிங்ஸ்டார்-டிபிஆர்எஸ் நிறுவனத்தால் நிலையான பொருளாதார சூழலை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டு 'பிபிபி' நிலையான போக்கு என்ற மேம்பட்ட தரநிலையை இந்தியா பெற்றுள்ளது
Posted On:
09 MAY 2025 4:25PM by PIB Chennai
உலகளவில் மதிப்புமிக்க கடன் மதிப்பீட்டு முகமையான மார்னிங்ஸ்டார் - டிபிஆர்எஸ் நிறுவனமானது இந்தியாவின் நீண்டகால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணய வழங்குநர் தரநிலை மதிப்பீட்டை பிபிபி (குறைந்தது) என்ற நிலையிலிருந்து பிபிபி நிலையான போக்கு என்ற மேம்பட்ட தரநிலையை வழங்கியுள்ளது.
இந்தியாவின் குறுகிய கால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணய மதிப்பீடுகளும் நிலையான சூழலை அடிப்படையாகக் கொண்டு ஆர்-2 (நடுத்தரம்) என்ற நிலையிலிருந்து ஆர்-2 (உயர்) என்ற மேம்பட்ட தரநிலையை வழங்கியுள்ளது.
இத்தகைய மேம்பட்ட தரநிலைகளைப் பெறுவதற்கு முக்கிய காரணிகளாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான முதலீடுகள், டிஜிட்டல் மயமாக்கல் போன்ற நடவடிக்கைகள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் நாட்டைக் கட்டமைப்பதற்கான சீர்திருத்தங்கள் உள்ளன. இவை அனைத்தும் நிதிசார் ஒருங்கிணைப்பை (கடன் மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் குறைத்தல்) எளிதாக்கியதுடன், நீடித்த உயர் வளர்ச்சியை (22-25 -ம் நிதியாண்டுகளில் சராசரியாக 8.2% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைக் கண்டுள்ளது) விரிவான பொருளாதார நிலைத்தன்மையுடன் (நிலைப்படுத்தப்பட்ட பணவீக்கம், வரம்புக்குட்பட்ட மாற்று விகிதம் மற்றும் சிறப்பான வெளிப்புற சமநிலை) எளிதாக்கியுள்ளது. அதிக மூலதன விகிதம், 13 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்த அளவிலான வராக் கடன்களுடன், வலுவான மூலதனத்துடன் கூடிய வங்கிகளைக் கொண்ட மீள்தன்மையுடனான வங்கி அமைப்பு, மேம்பட்ட தரநிலையைப் பெறுவதற்கு மற்றொரு குறிப்பிடத்தக்க உந்து சக்தியாக இருந்தது.
முதலீட்டு விகிதத்தை அதிகரிப்பதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து செயல்படுத்தி, நடுத்தர கால வளர்ச்சி வாய்ப்புகளை மேம்படுத்துவது என்பது கடன் மதிப்பீடுகளை மேலும் மேம்படுத்த உதவிடும். தற்போதைய பொதுக் கடன் குறிப்பிட நிலையில் இருந்தபோதிலும், உள்நாட்டு நாணய மதிப்பு, நீண்டகால முதிர்வு கட்டமைப்புகள் காரணமாக கடன் நிலைத்தன்மைக்கான அபாயங்கள் குறைவாகவே உள்ளன என்றும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர் சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான பொதுக் கடன் விகிதத்தைக் குறைப்பது நாட்டில் நிதிசார் செயல்பாடுகளை மேம்படுத்த உதவிடும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127922
***
TS/SV/RR/RR
(Release ID: 2127944)