மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒய்யுஜிஎம் புத்தாக்க மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

Posted On: 29 APR 2025 6:36PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற ஒய்யுஜிஎம் புத்தாக்க  மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி வல்லுநர்களிடையே உரையாற்றிய பிரதமர் "ஒய்.யு.ஜி.எம்" என்பது பங்குதாரர்களின் சங்கமம் என்றார்.வளர்ந்த இந்தியாவிற்கான எதிர்கால தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது என வர்ணித்தார். இந்தியாவின் புத்தாக்கக் கண்டுபிடிப்புத்  திறனை மேம்படுத்தும் முயற்சிகள் மற்றும் ஆழ்ந்த தொழில்நுட்பத்தில் அதன் பங்களிப்பு ஆகியவை இந்த நிகழ்வின் மூலம் வேகம் பெறும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

உண்மையான வாழ்க்கை என்பது சேவையிலும், தன்னலம் இல்லாமல் இருப்பதிலும் உள்ளது என்று சமஸ்கிருதத்தில் கூறப்பட்டுள்ள புனித நூல்களை மேற்கோள் காட்டிய திரு மோடி, அறிவியலும் தொழில்நுட்பமும் சேவைக்கான ஊடகமாகச் செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். எந்தவொரு நாட்டின் எதிர்காலமும் அதன் இளைஞர்களைச் சார்ந்துள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், எதிர்காலத்திற்கு அவர்களைத் தயார்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.  இந்தத் தயாரிப்பில் கல்வி முறை முக்கிய பங்கு வகிக்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், 21 ஆம் நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவின் கல்வி முறையை நவீனமயமாக்குவதற்கான முயற்சிகளைச் சுட்டிக்காட்டினார். உலகளாவிய கல்வித் தரத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதை எடுத்துரைத்த அவர், இந்திய கல்வி முறையில் அது கொண்டு வந்துள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் குறிப்பிட்டார். பிரதமர் இ-வித்யா மற்றும் தீக்ஷா தளங்களின் கீழ் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மற்றும் அளவிடக்கூடிய டிஜிட்டல் கல்வி உள்கட்டமைப்பு தளமான 'ஒரே நாடு, ஒரே டிஜிட்டல் கல்வி உள்கட்டமைப்பு' உருவாக்கப்பட்டதை அவர் எடுத்துரைத்தார், இது 30- க்கும் மேற்பட்ட இந்திய மொழிகள் மற்றும் ஏழு வெளிநாட்டு மொழிகளில் பாடப்புத்தகங்களை தயாரிக்க உதவும்.

"திறமை, மனோபாவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய மூன்றும் இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும்" என்று குறிப்பிட்ட  பிரதமர், ஏற்கனவே 10,000 அடல் ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.  இந்த ஆண்டு பட்ஜெட்டில் மேலும் 50,000 ஆய்வகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன போன்ற முன்முயற்சிகளைப் பட்டியலிட்டார். மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கான பிரதமர் வித்யா லட்சுமி திட்டம் தொடங்கப்பட்டதையும், மாணவர்களின் கற்றலை நிஜ உலக அனுபவமாக மாற்றுவதற்காக 7,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ளகப் பயிற்சி பிரிவுகளை  நிறுவியதையும் அவர் குறிப்பிட்டார். இளைஞர்களிடையே புதிய திறன்களை வளர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், இளைஞர்களின் ஒருங்கிணைந்த திறமை, மனோபாவம் மற்றும் தொழில்நுட்ப வலிமை ஆகியவை இந்தியாவை வெற்றியின் உச்சிக்கு இட்டுச் செல்லும் என்று கூறினார்.

அடுத்த 25 ஆண்டுகளுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், "யோசனையிலிருந்து முன்மாதிரி மற்றும் தயாரிப்பு வரையிலான பயணத்தை மிகக் குறுகிய காலத்தில் முடிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது" என்று கூறினார். ஆய்வகத்திலிருந்து சந்தைக்கான தூரத்தை குறைப்பது ஆராய்ச்சி முடிவுகளை விரைவாக மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்கிறது. மேலும் ஆராய்ச்சியாளர்களையும் இது ஊக்குவிக்கிறது மற்றும் அவர்களின் பணிக்கு உறுதியான ஊக்கத்தொகைகளை வழங்குகிறது என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் திரு தர்மேந்திர பிரதான், டாக்டர் ஜிதேந்திர சிங், திரு ஜெயந்த் சவுத்ரி, டாக்டர் சுகந்தா மஜும்தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் உரையாற்றிய திரு தர்மேந்திர பிரதான், வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நிறைவேற்ற கல்வியாளர்கள், தொழில்துறை மற்றும் கண்டுபிடிப்பாளர்களை ஒரே மேடையில் கொண்டுவரும் இந்த முயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்தியாவின் கண்டுபிடிப்பு திறனை அதிகரிப்பதற்கும், பிரதமரின் தலைமையின் கீழ் ஆழ்ந்த தொழில்நுட்பத்தில் நாட்டின் பங்கை வலுப்படுத்துவதற்கும் இது மேலும் உத்வேகம் அளிக்கும் என்று அவர் வலியுறுத்தினார். கல்வியாளர்கள், தொழில்துறை மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்த ரூ.1,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

2014-ம் ஆண்டுக்கு முன்பு நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் மூன்று ஆராய்ச்சி பூங்காக்கள் மட்டுமே இருந்தன என்றும் அவை தற்போது ஆறாக அதிகரித்துள்ளன என்றும் திரு பிரதான் குறிப்பிட்டார். இந்திய அரசின் கூட்டு முயற்சிகளால், 13 புதிய ஆராய்ச்சி பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஆராய்ச்சியின் வலுவான தூணாக செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அடல் புத்தாக்க இயக்கத்தின் கீழ், அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் தற்போது 10,000 பள்ளிகளில் செயல்பட்டு வருகின்றன, அவற்றின் வெற்றியை அடுத்து, 2025-26 பட்ஜெட்டில் மேலும் 50,000 ஆய்வகங்களை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று திரு தர்மேந்திர பிரதான் கூறினார். நாட்டின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை மையத்தில் வைத்து நாட்டின் இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அதிக பங்களிப்பு வழங்குவதே நோக்கம் என்றும் திரு தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார். நாட்டின் இளைஞர்களிடையே 'புதுமை கலாச்சாரத்தை' ஊக்குவிப்பதில் மாநாடு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2125248

*****

RB/DL


(Release ID: 2125301) Visitor Counter : 11
Read this release in: English , Urdu , Marathi , Hindi