பாதுகாப்பு அமைச்சகம்
நான்காம் தலைமுறை ஆழ்கடல் ரோந்துக் கப்பல் யார்டு (3040) கீல் பதிக்கும் நிகழ்வு
Posted On:
25 APR 2025 8:23AM by PIB Chennai
நான்காவது தலைமுறை ரோந்து கப்பல் யார்டு 3040 - க்கான கீல் பதிக்கும் (கப்பல் அடிப்பகுதி இணைப்புக் கட்டை பொருத்தல்) விழா நேற்று (ஏப்ரல் 24-ம் தேதி) கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் கொள்முதல் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் ராஜாராம் சுவாமிநாதன் கலந்து கொண்டார். இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கமாண்டர் பி.ஆர்.ஹரி (ஓய்வு), இந்தியக் கடற்படை மற்றும் கப்பல் கட்டும் தளத்தின் பிற மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு அடுத்த தலைமுறை கடல் ரோந்து கப்பல் கட்டுமானத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதாக உள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு கப்பல் கட்டும் திறன்களை வெளிப்படுத்துவதாக உள்ளது.
கோவாவில் உள்ள கோவா கப்பல் கட்டுமான நிறுவனம் மற்றும் கொல்கத்தாவின் கார்டன் ரீச் கப்பல் கட்டுமானம் மற்றும் பொறியியல் நிறுவனத்துடன் இணைந்து பதினொரு அடுத்த தலைமுறை கடல் ரோந்து கப்பல்களை உள்நாட்டிலேயே வடிவமைத்து நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தங்கள் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி கையெழுத்தாகின.
கடலோர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், கடல் சொத்துக்களைப் பாதுகாத்தல், கடற்கொள்ளை எதிர்ப்பு பணிகளுக்காக ஏறத்தாழ 3000 டன் எடையுடன் கூடிய இந்த ரோந்துக் கப்பலின் கீல் பதிக்கும் நிகழ்வு அதன் திட்டமிடப்பட்ட காலத்திற்குள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. 'தற்சார்பு இந்தியா' மற்றும் 'இந்தியாவில் உற்பத்தி செய்வோம்' என்ற இயக்கங்களின் தொலைநோக்குப்பார்வைக்கு ஏற்ப பதினொரு ரோந்துக் கப்பல்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், அவை இந்திய கடற்படையின் கடல்சார் வலிமையை அதிகரிக்க உதவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2124194
*****
TS/SV/RJ/KR
(Release ID: 2124217)
Visitor Counter : 16