பிரதமர் அலுவலகம்
ஏப்ரல் 24-ம் தேதி பிரதமர் பீகார் செல்கிறார்
பீகார் மாநிலம் மதுபானியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
பீகாரில் ரூ.13,480 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
பீகாரில் அம்ரித் பாரத், நமோ பாரத் விரைவு ரயில் சேவைகளை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்
Posted On:
23 APR 2025 6:30PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏப்ரல் 24-ம் தேதி பீகாருக்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11:45 மணியளவில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் ரூ.13,480 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
பீகார் மாநிலம் மதுபானியில் நடைபெறும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை அங்கீகரிக்கும் வகையில் ஊக்கத்தொகை மற்றும் தேசிய பஞ்சாயத்து விருதுகளையும் அவர் வழங்குகிறார்.
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஹத்துவாவில் ரூ.340 கோடி மதிப்பிலான சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தி ஆலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இது சமையல் எரிவாயுவின் விநியோகத்தை சீரமைக்கவும், மொத்த சமையல் எரிவாயு விநியோகத்திற்கான திறனை மேம்படுத்துவதற்கும் உதவிடும்.
பிராந்தியத்தில் மின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ரூ .1,170 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் கீழ், பீகார் மாநிரல மின்சாரத் துறையில் ரூ .5,030 கோடிக்கும் கூடுதல் மதிப்புள்ள பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
நாடு முழுவதும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப சஹர்சா – மும்பை இடையேயான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் சேவையையும், ஜெயநகர் - பாட்னா இடையேயான நமோ பாரத் விரைவு ரயில் சேவையையும், பிப்ரா- சஹர்சா, சஹர்சா - சமஸ்திபூர் இடையேயான ரயில் சேவைகளையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். சுபால் பிப்ரா ரயில் பாதை, ஹசன்பூர் பிதான் ரயில் பாதை, சாப்ரா, பகாஹா ஆகிய இடங்களில் இரண்டு இருவழி ரயில் மேம்பாலங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார். ககாரியா-அலாலி ரயில் பாதையை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். இத்தகைய திட்டங்கள் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதுடன், இந்தப் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு சமூக முதலீட்டு நிதியின் கீழ் சுமார் 930 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பிரதமர் வழங்குகிறார்.
பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், 15 லட்சம் புதிய பயனாளிகளுக்கு அனுமதிக் கடிதங்களை பிரதமர் வழங்குகிறார். நாடு முழுவதிலும் இத்திட்டத்தின் கீழ், 10 லட்சம் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான தவணைத் தொகையையும் விடுவிக்கிறார். பீகாரில் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 1 லட்சம் வீடுகளுக்கும் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 54,000 வீடுகளுக்கும் குடியேறுவதற்கான வீடுகளின் சாவிகளை பயனாளிகளுக்கு பிரதமர் வழங்குகிறார்.
*****
(Release ID: 2123904)
TS/SV/RJ/DL
(Release ID: 2123925)
Visitor Counter : 30