உள்துறை அமைச்சகம்
உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் கல்லீரல், பித்தப்பை பிலியரி அறிவியல் நிறுவனம் (ஐ.எல்.பி.எஸ்) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்பு
ஆரோக்கியமான கல்லீரல் ஆரோக்கியமான உடலின் அடித்தளம் - கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும்: திரு அமித் ஷா
Posted On:
19 APR 2025 4:39PM by PIB Chennai
உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் இன்று (19.04.2025) நடைபெற்ற கல்லீரல் - பித்தப்பை அறிவியல் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். தில்லி துணைநிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா, முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திரு அமித் ஷா தமது உரையில், நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் கல்லீரல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினார். நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளிலும், கல்லீரல் மீளுருவாக்கம் செய்யும் மிகப்பெரிய திறனைக் கொண்டுள்ளது எனவும் ஆரோக்கியமான கல்லீரல் ஆரோக்கியமான உடலின் நுழைவாயிலாகும் என்றும் அவர் தெரிவித்தார். உலக கல்லீரல் தினமான இன்று, விழிப்புணர்வு, முழுமையான தகவல்களுடன் தங்கள் 'கல்லீரலை' ஆரோக்கியமாக வைத்திருக்க ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். உடலின் தேவைக்கேற்ற தண்ணீர், உணவு, உடற்பயிற்சி, தூக்கம் ஆகியவற்றின் மூலம் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைய சாதிக்க முடியும் என்று திரு அமித் ஷா கூறினார்.
2047-க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டின் முன் வைத்துள்ளார் என்றும், சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவில் இந்தியா ஒவ்வொரு துறையிலும் தன்னம்பிக்கை பெற்று உலகை வழிநடத்தும் என்றும் திரு அமித் ஷா கூறினார். நல்ல உடல் நலன் மூலமாகவே வளர்ந்த இந்தியா என்ற கோட்பாட்டை நனவாக்க முடியும் என்று கூறிய அவர், ஒவ்வொரு குடிமகனும் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியமானது என்று கூறினார்.
நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களை நல்ல அணுகுமுறையுடன் ஆரோக்கியமாக வைத்திருக்க பல திட்டங்களை தொடங்கியுள்ளார் என்று அவர் கூறினார். நாம் நோய்வாய்ப்பட்டு விடாமல் இருக்க ஆயுஷ் அமைச்சகம் ஒரு நோய்த் தடுப்பு முறையை உருவாக்கப் பணியாற்றி வருவதாக அவர் கூறினார். இப்போது பெரிய அலோபதி மருத்துவமனைகள் கூட ஆயுஷ் பிரிவுகளைத் திறக்கின்றன என்று திரு அமித் ஷா கூறினார். நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு ₹ 5 லட்சம் வரையிலான சிகிச்சைக்கான முழு செலவையும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஏற்றுக்கொள்கிறது என்று அவர் கூறினார்.
நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்க மோடி அரசு ₹ 65 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது என்றும் அவர் கூறினார். ஜெனரிக் மருந்துகளுக்காக, நாட்டில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மருந்தக மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் இந்த மையங்கள் மூலம் 80 சதவீதம் வரை மருந்துகள் மலிவாக கிடைக்கின்றன என்றும் அவர் கூறினார். இந்திரதனுஷ் இயக்கத்தின் கீழ், பிறந்தது முதல் 15 வயது வரையிலான சிறார்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். 2014-ல் நாட்டில் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்தன என்றும், இப்போது இந்த எண்ணிக்கை 23-ஐ எட்டியுள்ளது என்றும், 2014-ல் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன என்றும், இப்போது இது 780 ஆக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 2014-ல் 51 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள் இருந்தன என்றும், அவை இப்போது 1 லட்சத்து 18 ஆயிரமாக அதிகரித்துள்ளன என்றும், மேலும் 75 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்பட உள்ளன என்றும் திரு அமித் ஷா கூறினார்.
நாட்டு மக்கள் அனைவரும் நல்ல உணவு, போதுமான தண்ணீர், போதுமான தூக்கம், வழக்கமான உடற்பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் மற்றபடி மக்களின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஏற்கும் எனவும் அமைச்சர் திரு அமித் ஷா கூறினார்.
******
(Release ID: 2122904)
PLM/SG
(Release ID: 2122916)
Visitor Counter : 32