நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
சட்டமுறை எடையளவு (பொது) விதிகள் 2011-ன் கீழ் எரிவாயு மீட்டர்களுக்கான வரைவு விதிகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது
Posted On:
14 APR 2025 12:40PM by PIB Chennai
சட்டமுறை எடையளவு (பொது) விதிகள், 2011-ன் கீழ் எரிவாயு மீட்டர்களுக்கான வரைவு விதிகளை உருவாக்கியதன் மூலம், நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்துதல், நியாயமான வர்த்தக நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் எரிவாயு பயன்பாட்டில் துல்லியமான அளவீட்டை உறுதி செய்தல் ஆகியவற்றில் இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த விதிகள் உள்நாட்டு, வணிக மற்றும் தொழில்துறை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் அனைத்து எரிவாயு மீட்டர்களும் வர்த்தகத்தில் பயன்படுத்துவதற்கு முன்பு சோதனை, சரிபார்ப்பு மற்றும் முத்திரையிடலுக்கு உட்படுத்தப்படுவதை கட்டாயமாக்குகின்றன. இந்த எரிவாயு மீட்டர்கள் பயன்பாட்டில் இருக்கும்போது அவை சரியாக இருப்பதை உறுதி செய்வதற்காக விதிகளின் கீழ் மறு சரிபார்ப்பும் பரிந்துரைக்கப்படுகிறது.
இந்தப் புதிய விதிகளின் முதன்மை நோக்கம் எரிவாயுவை அளவிடுவதில் துல்லியம், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதாகும். சரிபார்க்கப்பட்ட மற்றும் முத்திரையிடப்பட்ட எரிவாயு மீட்டர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுப்பதோடு சர்ச்சைகளைக் குறைக்கும் மற்றும் தவறான அல்லது சாமர்த்தியமாக ஏமாற்றும் நோக்குடன் கையாளப்பட்ட சாதனங்களுக்கு எதிராக நுகர்வோருக்கு உத்தரவாதமான பாதுகாப்பை வழங்கும். நியாயமான கட்டணம், மேம்பட்ட எரிசக்தி திறன் மற்றும் தரப்படுத்தப்பட்ட மற்றும் இணக்கமான உபகரணங்களைப் பராமரிக்க ஏற்படும் குறைந்த செலவுகள் ஆகியவற்றின் மூலம் நுகர்வோர் நேரடியாகப் பயனடைகின்றனர்.
நுகர்வோர்களுக்கு ஏற்படும் நன்மைகளைத் தாண்டியும் கூடுதலாக, உற்பத்தியாளர்கள் மற்றும் எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கான கட்டமைக்கப்பட்ட இணக்க அமைப்பை இந்த விதிகள் வழங்குகின்றன. இது சர்வதேச சிறந்த நடைமுறைகள் மற்றும் சர்வதேச சட்ட அளவியல் அமைப்பு தரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தச் சீரமைப்பு உலகளாவிய தரங்களுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பலப்படுத்துகிறது, சர்வதேச வர்த்தகத்தில் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது மற்றும் உள்நாட்டு உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் புதுமை மற்றும் தர உத்தரவாதத்தை ஊக்குவிக்கிறது.
அனைத்து எடைகள் மற்றும் அளவீடுகளின் துல்லியத்தை உறுதி செய்யும் பொறுப்பு நுகர்வோர் விவகாரங்கள் துறையின் சட்ட அளவியல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, இந்த விதிகளை உருவாக்க முழுமையான மற்றும் உள்ளடக்கிய ஆலோசனை செயல்முறையை அது பின்பற்றியுள்ளது. இந்த வரைவை உருவாக்குவதற்கு இந்திய சட்டமுறை எடையியல் நிறுவனம், பிராந்திய குறிப்பு தர ஆய்வகங்கள், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டது. அதே நேரத்தில், வரைவை ஆய்வு செய்யவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்ளீடுகளை வழங்கவும் இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) ஈடுபடுத்தப்பட்டது.
உற்பத்தியாளர்கள், சோதனை ஆய்வகங்கள், நகர எரிவாயு விநியோக நிறுவனங்கள் மற்றும் மாநில சட்ட அளவியல் துறைகள் உள்ளிட்ட பங்குதாரர்களிடையே வரைவு விதிகள் பரவலாக விநியோகிக்கப்பட்டன. அவர்களின் கருத்துக்கள் கவனமாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, தேவைப்படும் இடங்களில், இறுதி வரைவில் அவை சேர்க்கப்பட்டன. ஒவ்வொரு அம்சமும் விரிவாக கவனிக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும், ஒழுங்குமுறை தேவைகளை எளிதாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக பல சுற்று பங்குதாரர் கூட்டங்கள் மற்றும் துறைகளுக்கு இடையேயான ஆலோசனைகக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
விவாதங்களைத் தொடர்ந்து, தொழில்துறை மற்றும் செயல்படுத்தும் அதிகாரிகள் இணக்கத்திற்கு தயாராக இருக்க அனுமதிக்கும் இடைக்கால ஏற்பாட்டுடன் விதிகள் இறுதி செய்யப்பட்டன. இந்த அளவிடப்பட்ட அணுகுமுறை எரிவாயு விநியோகத்தை சீர்குலைக்காமல் அல்லது நுகர்வோர் அல்லது வணிகங்களுக்கு சுமை இல்லாமல் நாடு முழுவதும் சீராக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது.
உலகளாவிய வரையறைகளுக்கு ஏற்ப இந்தியாவின் அளவீட்டு சுற்றுச்சூழல் அமைப்பை நவீனமயமாக்குவதற்கும், நுகர்வோர் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும், சந்தையில் செயல்திறன் மற்றும் ஒருமைப்பாட்டை ஊக்குவிப்பதற்கும் துறையின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த விதிகளுடன், நுகர்வோரை மையமாகக் கொண்ட ஆளுகை மற்றும் சர்வதேச தரப்படுத்தல் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து, வெளிப்படையான மற்றும் பொறுப்பான எரிவாயு அளவீட்டு முறைக்கு இந்தியா நெருக்கமாக நகர்கிறது.
***
(Release ID=2121543)
TS/PKV/KPG/RJ
(Release ID: 2121671)
Visitor Counter : 23