உள்துறை அமைச்சகம்
குஜராத் வர்த்தகம் மற்றும் தொழில் சபையின் வருடாந்திர வர்த்தக கண்காட்சி 2025 தொடக்க அமர்வில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரை
Posted On:
10 APR 2025 4:27PM by PIB Chennai
குஜராத் வர்த்தகம் மற்றும் தொழில் சபையின் வருடாந்திர வர்த்தக கண்காட்சி 2025 தொடக்க அமர்வில் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா இன்று காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், குஜராத் முதலமைச்சர் திரு. பூபேந்திர படேல் உட்பட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா தமது உரையில், குஜராத் வர்த்தகம் மற்றும் தொழில் சபையானது குஜராத்தின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது என்று குறிப்பிட்டார். கஸ்தூரிபாய் சேத் என்பவரின் தலைமையில் இந்த சபைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்று அவர் தெரிவித்தார். இந்த வர்த்தக சபை இளைஞர்களுக்கு தொழில்முனைவு, தைரியம் மற்றும் உலகில் எங்கு வேண்டுமானாலும் வர்த்தகம் செய்வதற்கான உற்சாகத்தை அளித்துள்ளது என்று திரு ஷா கூறினார். தொடர்ச்சியாக 75 ஆண்டுகளாக, சபை அந்த பாரம்பரியத்தை நிலைநிறுத்தியுள்ளது. அரசுடன் உரையாடலைப் பேணி, பொது நலனில் அக்கறை கொண்டுள்ளது. இயற்கைப் பேரழிவுகளின் போது மக்களுடன் தோளோடு தோள் நிற்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
வர்த்தக சபை தனது 75 ஆண்டு பயணத்தை நிறைவு செய்துள்ள நிலையில், தற்போது 100 ஆண்டுகள் என்ற மைல்கல்லை நோக்கி பயணிப்பதாக திரு அமித் ஷா தெரிவித்தார். வர்த்தக சபையின் தலைமைப் பொறுப்பாளர் 75 முதல் 100 ஆண்டுகள் வரையிலான காலகட்டப் பயணத்திற்கான செயல் திட்டத்தை தொழில்முறை ரீதியில் தயாரித்து, அதை குஜராத்தின் வளர்ச்சியுடன் இணைத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தொழில்துறை சார்ந்த தொழில்முனைவு உணர்வு உயிர்ப்புடன் இருப்பதையும் குஜராத்தின் இளைஞர்களிடையே தொழில்முனைவைமேலும் ஊக்குவிக்கப்படுவதையும் உறுதி செய்வதற்கு, வர்த்தக சபை ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நமது மிகப்பெரிய சொத்து என்று குறிப்பிட்ட அமைச்சர், நாம் திரும்பிப் பார்த்தால், ஒவ்வொரு பெரிய தொழிலும் ஒரு காலத்தில் சிறிய அளவிலான தொழிலாகத்தான் தொடங்கப்பட்டிருந்தன என்றார். நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு குஜராத்தின் சிறு தொழில்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன என்று திரு ஷா கூறினார். குஜராத் தொழில், வர்த்தக சபை சிறு தொழில்களின் பாரம்பரியத்தை புத்தொழில் நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்து, இளைஞர்களுக்கு ஒரு விரிவான சூழல் சார் அமைப்பை உருவாக்கும் பொருட்டு நவீனமயமாக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். அரசுக்கும், சிறு தொழில்களுக்கும், வளரும் இளம் தொழில்முனைவோர்களுக்கும் இடையே பாலமாக வர்த்தக சபை செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
வரவிருக்கும் காலங்களில் இந்தச் சபை பொருத்தமானதாக இருக்க விரும்பினால், அது வெறுமனே நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதைத் தாண்டி, அதற்குப் பதிலாக தொழில்கள், தொழில்சார் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களுக்கு ஆதரவளிக்க ஒரு நிரந்தர முறையை நிறுவ வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். வர்த்தக சபையின் பொறுப்பாளர்கள் தொழில்வல்லுநர்களின் ஒத்துழைப்புடன் அத்தகைய அமைப்பை உருவாக்கினால், சபையின் காலத்தை அடுத்த 25 ஆண்டுகளுக்கு நீடிக்க முடியும் என்று அவர் கூறினார். அரசுக்கும் புதிய தொழில்முனைவோருக்கும் , அரசுக்கும் இளைஞர்களுக்கும் இடையில் ஒரு பாலமாக வர்த்தக சபை செயற்பட முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பாரம்பரியத் தொழில்கள் முதல் அதிநவீன தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் முன்னோடி துறைகள் வரை பல்வேறு துடிப்பான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட தொழில்துறை சூழல்சார் அமைப்பை குஜராத் இன்று காட்சிப்படுத்துகிறது என்று திரு அமித் ஷா கூறினார். குஜராத்தில் தொழிற்சாலைகளை நிறுவ விரும்பும் தொழில்முனைவோருக்கு வர்த்தக நட்பு, அரசியல் தலையீடு இல்லாத, திறமையான அமைப்புகள் மற்றும் வேலைநிறுத்தம் இல்லாத சூழல் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். திரு. நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களுடன் அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபடுவதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கி முடிவெடுப்பதற்கு குஜராத் அரசு முன்னுரிமை அளித்ததை திரு ஷா நினைவுகூர்ந்தார். தொழில் துறைக்கு ஆதரவான சூழலை முதலமைச்சர் திரு. பூபேந்திர படேல் மேலும் வலுப்படுத்தியுள்ளார் என்று அவர் குறிப்பிட்டார். வலுவான உள்கட்டமைப்புதான் வலுவான பொருளாதாரத்தின் அடித்தளம் என்றும், வலுவான பொருளாதாரம் அதன் மூலம் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் என்ற திரு. மோடியின் தொலைநோக்குக் கொள்கையை அவர் எடுத்துரைத்தார். இதன் விளைவாக, இந்தியாவின் வளர்ச்சிக் கதையில் குஜராத் இன்று முக்கிய பங்கு வகிப்பதுடன், உலகப் பொருளாதாரத்தின் நுழைவாயிலாகவும் உருவாகி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
'குஜராத்தின் தொலைநோக்குப் பார்வை– உலகளாவிய லட்சியம்' என்ற குறிக்கோளுடன் வர்த்தக சபை முன்னேறி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். இன்று தொடங்கிய கண்காட்சியில் பங்கேற்க பல்வேறு துறைகள் மற்றும் கண்டுபிடிப்பு துறைகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் எடுத்துரைத்தார். 1949-ல் இந்த வர்த்தக சபை தொடங்கப்பட்டதிலிருந்து, குஜராத்தின் வளர்ச்சிக்கு தனிச்சிறப்பு வாய்ந்த பங்களிப்பை வழங்கியுள்ளது என்று அவர் கூறினார். 75-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு தொழில்துறை அமைப்புகளுடன் இணைந்துள்ள வர்த்தக சபை மாநிலத்தின் தொழில்துறை நிலப்பரப்பை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. 'வர்த்தகத்தை வளர்த்து குஜராத்தை மாற்றுவோம்' என்ற குறிக்கோளை நனவாக்குவதில் வர்த்தக சபையின் அர்ப்பணிப்பான முயற்சிகளையும், அரசுடன் அதன் நிலையான, பயனுள்ள பேச்சுவார்த்தையையும் உள்துறை அமைச்சர் வலியுறுத்தினார். துடிப்புமிக்க குஜராத் முன்முயற்சியின் உலகளாவிய அங்கீகாரம் மற்றும் வெற்றிக்கு வர்த்தக சபையின் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் அவர் அங்கீகரித்தார். 2001-ம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்திலிருந்து மீண்டெழுந்து, 2025-ம் ஆண்டு முன்னோடி தொழில்களுக்கான மையமாக உருவெடுத்தது வரையிலான குஜராத்தின் குறிப்பிடத்தக்க பயணத்தில் வர்த்தக சபை முக்கிய பங்கு வகித்துள்ளது என்று திரு ஷா குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் பல்வேறு மாற்றத்துக்கான முன்முயற்சிகளை தொடங்குவதில் குஜராத் முன்னோடியாகத் திகழ்கிறது என்று திரு அமித் ஷா எடுத்துரைத்தார். ஸ்மார்ட் உள்கட்டமைப்பு என்ற கருத்து முதன்முதலில் குஜராத்தில்தான் உருவானது என்றும், கிராமங்களில் 24 மணி நேர மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதில் மாநில அரசு முன்னோடியாக இருந்தது என்றும் அவர் கூறினார். குஜராத் தன்னை ஒரு உலகளாவிய நிதி மையமாக நிலைநிறுத்த ஆரம்ப முயற்சியை எடுத்தது. 2009-ம் ஆண்டு குஜராத்தில் இ-கிராம் திட்டம் தொடங்கப்பட்டது என்றும், இதன் மூலம் ஊரகப் பகுதிகளுக்கு இடையேயான இணைப்பு மற்றும் டிஜிட்டல் சேவைகள் கிடைக்கின்றன என்றும் அவர் கூறினார். மகப்பேறு இறப்பு விகிதங்களைக் குறைப்பதிலும் அரசு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தச் சாதனைகள் அனைத்தும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் சாத்தியமாகி உள்ளது என்று திரு ஷா குறிப்பிட்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா கடந்த 11 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது, பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளது மற்றும் பல்வேறு களங்களில் உலகளாவியத் தலைவராக உருவெடுத்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். திரு மோடியின் தலைமையின் கீழ் பின்பற்றப்பட்ட முழுமையான, பன்முக மற்றும் ஒட்டுமொத்த அரசு அணுகுமுறையின் காரணமாக இந்தச் சாதனைகள் சாத்தியமாகியுள்ளன என்று அவர் தெரிவித்தார். குஜராத்தில் வளர்ச்சி மற்றும் நல்லாட்சியின் இந்தப் பாரம்பரியத்தை உறுதியாக நிலைநிறுத்துவதிலும், தொடர்வதிலும் முதலமைச்சர் திரு. பூபேந்திர படேல் முக்கிய பங்காற்றியுள்ளார் என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.
அடுத்த 25 ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தை வடிவமைக்கும் அனைத்து முக்கிய துறைகளிலும் குஜராத் முன்னோடியாக உருவெடுத்துள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா கட்ச் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது என்றும், மிகப்பெரிய பசுமை திட்டமான தோலேரா ஸ்மார்ட் சிட்டி மாநிலத்தில் வடிவம் பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் இரண்டாவது நீளமான விரைவுச் சாலையான சூரத்-சென்னை விரைவுச் சாலை குஜராத்தில் இருந்து தொடங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தியாவின் முதல் சர்வதேச நிதி மையமான கிஃப்ட் சிட்டி, நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம் மற்றும் முதல் நமோ பாரத் ரேபிட் ரெயில் ஆகியவற்றுடன் குஜராத் முன்னணியில் உள்ளது என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார். முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் குஜராத்திற்கு வலுவான தொழில்துறை மேம்பாட்டு உள்கட்டமைப்பு, முற்போக்கான கொள்கைகள் மற்றும் தொழில்துறைக்கு உகந்த ஆளுமை மாதிரி ஆகியவற்றை வழங்கியுள்ளார் என்று திரு ஷா மேலும் குறிப்பிட்டார்.
***
Release ID: 2120709)
SV/PKV/RJ
(Release ID: 2120726)
Visitor Counter : 30