மக்களவை செயலகம்
விரைவான சீர்திருத்தங்களுடன் கூடிய வாய்ப்புகளின் பூமியாக புதிய இந்தியா திகழ்கிறது: மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா
Posted On:
08 APR 2025 6:17PM by PIB Chennai
ஒவ்வொரு துறையிலும் விரைவான சீர்திருத்தங்களுடன் புதிய இந்தியாவானது வாய்ப்புகளின் பூமியாக உருவெடுத்துள்ளது என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா கூறியுள்ளார். உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள அவர், சமர்கண்ட் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களிடையே இன்று (08.04.2025) உரையாற்றினார். இந்தியாவில் ஆயுஷ்மான் பாரத் போன்ற தேசிய முன்முயற்சிகள் சுகாதாரத் துறையில் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்று அவர் கூறினார். ஆயுஷ்மான் பாரத் திட்டம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என இரண்டையும் உள்ளடக்கியதாக விரிவடைந்து வருவதால், நாட்டின் சுகாதார அமைப்பில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று அவர் தெரிவித்தார். இந்தியாவில் மருத்துவ ஆராய்ச்சியும், கல்வியும் விரைவான வளர்ச்சியை அடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள் இந்திய மதிப்புகள், கலாச்சாரம் ஆகியவற்றின் தூதர்களாக திகழ்கின்றனர் என அவர் தெரிவித்தார். ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், இந்திய மாணவர்கள் இந்திய விழுமியங்களில் ஆழமாக வேரூன்றி, அவற்றை அந்த நாடுகளில் பரப்புகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற கூட்டமைப்பின் 150-வது கூட்டத்தில் பங்கேற்க இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு (IPD) தலைமை வகித்து திரு ஓம் பிர்லா நான்கு நாள் பயணமாக உஸ்பெகிஸ்தான் சென்றுள்ளார். அவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுடன் நேற்று கலந்துரையாடினார். உஸ்பெகிஸ்தானில் உள்ள இந்திய வம்சாவளியினர் இந்தியா மீது வைத்துள்ள அன்பும் பாசமும் உத்வேகம் அளிக்கிறது என்று குறிப்பிட்ட திரு பிர்லா, இந்திய சமுதாயத்தினரின் முயற்சிகள் இந்தியாவின் உலகளாவிய அடையாளத்தை வலுப்படுத்த உதவுகின்றன என்றார். இந்தியாவில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாகவும், வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தின் ஒரு பகுதியாக இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் வெளிநாடுவாழ் இந்தியர்களை திரு ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார்.
ஜார்ஜியா நாடாளுமன்றத் தலைவர் சால்வா பப்புவாஷ்விலியை திரு ஓம் பிர்லா சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கும் இடையேயான இளைஞர் பரிமாற்றத் திட்டங்கள், டிஜிட்டல் ஒத்துழைப்பு, மக்களுக்கு இடையேயான உறவுகள் ஆகியவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
***
(Release ID: 2120133)
TS/PLM/AG/DL
(Release ID: 2120167)