அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மருந்துகள் கண்டுபிடிப்பு, மரபணு ஆய்வு ஆகியவற்றில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சிஎஸ்ஐஆர் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன: மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங்
Posted On:
06 APR 2025 3:43PM by PIB Chennai
மருந்துகள் கண்டுபிடிப்பு, மரபணு ஆய்வு போன்றவற்றில் ஹைதராபாத்தைச் சேர்ந்த மத்திய தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) கீழ் செயல்பாடும் நிறுவனங்களின் முக்கிய பங்கை மத்திய அறிவியல் - தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் பாராட்டியுள்ளார். ஹைதராபாதில் உள்ள சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களின் பணிகளை ஆய்வு செய்ய அமைச்சரால் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட முதன்மை சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களான சிஎஸ்ஐஆர்-இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் (சிஎஸ்ஐஆர்-ஐஐசிடி), சிஎஸ்ஐஆர்-தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (சிஎஸ்ஐஆர்-என்ஜிஆர்ஐ), சிஎஸ்ஐஆர்-செல்லுலார் - மூலக்கூறு உயிரியல் மையம் (சிஎஸ்ஐஆர்-சிசிஎம்பி) ஆகியவற்றின் இயக்குநர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அந்தந்த நிறுவனங்களின் சமீபத்திய சாதனைகள், அறிவியல் பங்களிப்புகளை முன்வைக்க இயக்குநர்களுக்கு இந்தக் கூட்டம் ஒரு தளமாக செயல்பட்டது.
அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதிலும், தேசிய இயக்கங்களுக்கு ஆதரவளிப்பதிலும், தற்சார்பு அறிவுசார் பொருளாதாரமாக மாறுவதற்கான இந்தியாவின் இலக்குக்கு பங்களிப்பதிலும் சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களின் முக்கிய பங்கைத் திரு ஜிதேந்திர சிங் பாராட்டினார். தேசிய வளர்ச்சிக்கு, குறிப்பாக சமூக சவால்களை எதிர்கொள்வதிலும், நிலைத்தன்மையை ஊக்குவிப்பதிலும் அறிவியல் அடிப்படையிலான தீர்வுகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
அறிவியல் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தொழில்முனைவு ஆகியவற்றுக்கான செழிப்பான இடமாக ஹைதராபாத் உருவெடுத்துள்ளது என்று அமைச்சர் கூறினார். இந்த மூன்று நிறுவனங்களின் பங்களிப்பை கருத்தில் கொண்டு, ஹைதராபாத்தில் சிஎஸ்ஐஆர் புத்தொழில் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது 2025 ஏப்ரல் 22-23 தேதிகளில் நடத்தப்பட இருப்பதாகவும் அவர் கூறினார். அறிவியல் - தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள், வணிகமயமாக்கல், தற்சார்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் உறுதிப்பாட்டை திரு ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார்.
***
(Release ID: 2119539)
PLM/ RJ
(Release ID: 2119544)
Visitor Counter : 49