மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசும், கோழிப்பண்ணை நிறுவனங்களும் இணைந்து செயல்பட முடிவு
Posted On:
05 APR 2025 2:44PM by PIB Chennai
மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட பறவைக் காய்ச்சல் குறித்து விவாதிக்க நேற்று (2025 ஏப்ரல் 4) புதுதில்லியில் ஒரு உயர்நிலைக் கூட்டத்தை நடத்தியது. துறையின் செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், விஞ்ஞான வல்லுநர்கள், கோழிப்பண்ணைத் தொழில் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்றனர். பறவைக் காய்ச்சலின் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்யவும், நோயைக் கட்டுப்படுத்தவும் அதன் பரவலைத் தடுப்பதற்கான உத்திகளை ஆராயவும் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
பறவைக் காய்ச்சலைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து அமைச்சகம் மூன்று முனை உத்தியை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இது கடுமையான உயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கியது.
இதில் கோழிப் பண்ணைகள் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்த வேண்டும். அத்துடன் நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்க கடுமையான உயிர் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நோய் கண்காணிப்பு- கட்டுப்பாட்டை மேம்படுத்த கோழிப் பண்ணைகளை வலுப்படுத்துதல், கட்டாய பதிவு செய்தல் வேண்டும். அனைத்து கோழிப் பண்ணைகளும் ஒரு மாதத்திற்குள் மாநில கால்நடை பராமரிப்புத் துறைகளில் பதிவு செய்ய வேண்டும். இந்த உத்தரவுக்கு 100% இணங்குவதை உறுதி செய்யுமாறு கோழிப்பண்ணைத் தொழில் துறையினரை அரசு வலியுறுத்தியுள்ளது.
கூட்டத்தில் பேசிய திருமதி அல்கா உபாத்யாயா, "நமது கோழிப்பண்ணைத் துறையைப் பாதுகாப்பது உணவுப் பாதுகாப்பு கிராமப்புற வாழ்வாதாரத்திற்கு முக்கியமானது என்றார். பறவைக் காய்ச்சலுக்கு எதிரான நமது போராட்டத்தில் கடுமையான பாதுகாப்பு, அறிவியல் கண்காணிப்பு, பொறுப்பான தொழில் நடைமுறைகள் அவசியம் என்றார். முன்கூட்டிய எச்சரிக்கை, சுற்றுச்சூழல் கண்காணிப்புக்கான முன்கணிப்பு மாதிரி முறையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் செயலாளர் வலியுறுத்தினார். இந்தியாவில் அதிக நோய்க்கிருமி பறவைக் காய்ச்சலுக்கு (HPAI) எதிராக தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. கோழிப்பண்ணைத் துறையில் மேலும் பொருளாதார இழப்புகளைத் தடுப்பதற்கான தடுப்பூசிப் பன்னாட்டை ஆராயுமாறு கோழிப்பண்ணைத் தொழில்துறையின் பிரதிநிதிகள் அரசை வலியுறுத்தினர்.
***
(Release ID: 2119198)
PLM/RJ
(Release ID: 2119234)
Visitor Counter : 77