சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வக்ஃப் திருத்த மசோதா - 2025: அனைத்துத் தரப்பினரின் ஈடுபாட்டுடன் சீர்திருத்தம்

Posted On: 04 APR 2025 3:45PM by PIB Chennai

அறிமுகம்:

வக்ஃப் சொத்துக்க ளை மேலாண்மை செய்வதிலும் நிர்வகிப்பதிலும் உள்ள சிக்கல்களை சரிசெய்ய வக்ஃப் திருத்த மசோதா - 2025 அறிமுகப்படுத்தப்பட்டது. விதிகளைத் தெளிவுபடுத்துவது, முடிவெடுப்பதில் அதிகமான நபர்களைச் சேர்ப்பது, வக்ஃப் சொத்துக்களின் பயன்பாட்டை மேம்படுத்துவது ஆகியவை இதன் நோக்கங்கள் ஆகும்.

2024 ஆகஸ்ட் 8 அன்று, மக்களவையில் இரண்டு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.  அவை வக்ஃப் சட்டத் திருத்த மசோதா - 2024, முசல்மான் வக்ஃப் (ரத்து )மசோதா - 2024 ஆகும். இந்த மசோதாக்கள் வக்ஃப் வாரியங்கள் நியாயமாகச் செயல்படுவதையும், வக்ஃப் சொத்துக்கள் சிறப்பாக நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டவையாகும்.

முசல்மான் வக்ஃப் ரத்து மசோதாவானது, பிரிட்டிஷ் ஆட்சியின் போது உருவாக்கப்பட்டு இப்போது காலாவதியான முசல்மான் வக்ஃப் சட்டம் - 1923-ஐ ரத்து செய்யக் கொண்டுவரப்பட்டது. இந்தப் பழைய சட்டத்தை நீக்குவது என்பது வக்ஃப் சட்டம், 1995-ன் கீழ் மிகவும் நிலையான, வெளிப்படையான, பொறுப்புக்கூறக்கூடிய அமைப்பை உருவாக்க உதவும். அத்துடன் பழைய சட்டத்தால் ஏற்படும் குழப்பங்களையும் நீக்கும்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவானது வக்ஃப் சொத்துக்களை நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க வக்ஃப் சட்டம் -1995-ஐ புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முந்தைய சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து வக்ஃப் வாரியங்களின் செயல்திறனை மேம்படுத்துதல், சட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்தல் போன்ற மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பதிவு செயல்முறையை மேம்படுத்துதல் மற்றும்  வக்ஃப் சொத்துகளைப் பதிவு செய்து நிர்வகிப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கை அதிகரித்தல் ஆகியன முக்கிய நோக்கங்களில் சிலவாகும்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவின் தனித்துவமான அம்சங்கள்:

2024 ஆகஸ்ட் 9 அன்று, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தனித்தனி தீர்மானங்கள் மூலம் மசோதாவை மறுஆய்வுக்காகவும், ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காகவும் கூட்டுக் குழுவுக்கு அனுப்ப ஒப்புக்கொண்டன. இந்தக் கூட்டுக்குழுவில் மக்களவையில் இருந்து 21 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் இருந்து 10 உறுப்பினர்களும் இடம்பெற்றிருந்தனர்.

இந்தச் சட்டம் பரந்த தாக்கத்தை ஏற்படுத்துவதால், அது குறித்து பொதுமக்கள், நிபுணர்கள், சம்பந்தப்பட்ட தரப்பினர் பிற தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து கருத்துக்களை சேகரிக்க குழு முடிவு செய்தது.

2024 ஆகஸ்ட் 22 அன்று கூட்டுக் குழுவின் முதல் அமர்வு நடைபெற்றது.

பல்வேறு அமர்வுகளின் போது கலந்தாலோசிக்கப்பட்ட முக்கிய நிறுவனங்கள் / பங்குதாரர்கள் விவரம்:

*அகில இந்திய சன்னி ஜாமியத்துல் உலமா, மும்பை;

*இந்திய முஸ்லிம்கள் சிவில் உரிமைகள் (IMCR), புது தில்லி

* முத்தாஹெதா மஜ்லிஸ்-இ-உலேமா, ஜம்மு காஷ்மீர் (மிர்வாய்ஸ் உமர் பாரூக்)

* இந்திய ஜகாத் அறக்கட்டளை

* அஞ்சுமன் இ ஷிதேலி தாவூதி போஹ்ரா சமூகம்

* சாணக்யா தேசிய சட்டப் பல்கலைக்கழகம், பாட்னா

* அகில இந்திய பஸ்மண்டா முஸ்லிம் மஹாஸ், தில்லி

* அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB), தில்லி

* அகில இந்திய சூஃபி சஜ்ஜதாஷின் கவுன்சில் (ஏ.ஐ.எஸ்.எஸ்.சி), அஜ்மீர்

* முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச், தில்லி

* முஸ்லிம் பெண்கள் அறிவுஜீவிகள் குழு

* ஜாமியத் உலமா-இ-ஹிந்த், தில்லி

* ஷியா முஸ்லிம் தர்மகுரு, அறிவுஜீவிகள் குழு

* தாருல் உலூம் தியோபந்த்

நாடாளுமன்ற கூட்டுக்குழு 36 கூட்டங்களை நடத்தியது. பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள், மாநில வக்ஃப் வாரியங்கள் வல்லுநர்கள் / பங்குதாரர்களின் கருத்துக்கள் பரிந்துரைகள் கேட்கப்பட்டன. மொத்தம் 97 லட்சத்து 27 ஆயிரத்து 772 கருத்துகள் நேரடியாகவும் டிஜிட்டல் முறைகள் வாயிலாகவும் பெறப்பட்டன.

வக்ஃப் திருத்த மசோதா -2024-ஐ முழுமையாக மறுஆய்வு செய்ய, குழு இந்தியாவின் பல நகரங்களில் விரிவான ஆய்வுப் பயணங்களை மேற்கொண்டது.

கூட்டுக்குழு தனது அறிக்கையை 31 ஜனவரி 2025 அன்று மக்களவைத் தலைவரிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை 13 பிப்ரவரி 2025 அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பிக்கப்பட்டது.

நிறைவுக் கருத்து:

வக்ஃப் திருத்த மசோதா - 2024 குறித்த கூட்டு நாடாளுமன்றக் குழு அறிக்கை, வக்ஃப் சொத்து நிர்வாகத்தை நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும், திறன் வாய்ந்ததாகவும் மாற்றுவதற்கான முயற்சியை எடுத்துக்காட்டுகிறது. குழு பல்வேறு கண்ணோட்டங்களைக் கேட்டு, சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவலைகளை நிவர்த்தி செய்ய விரிவான விவாதங்களை நடத்தியது. மசோதாவில் முன்மொழியப்பட்ட அம்சங்கள் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளன. அனைவரையும் உள்ளடக்கிய, பொறுப்பான நிர்வாக அமைப்பை உருவாக்குவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.

-----

Release ID : 2118763

TS/PLM/KPG/DL


(Release ID: 2119005) Visitor Counter : 80