சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வக்ஃப் (திருத்த) மசோதா, 2025: சட்டம் மற்றும் மசோதா இரண்டுக்கும் இடையிலான மாற்றங்கள்:ஒரு கண்ணோட்டம்

Posted On: 04 APR 2025 4:03PM by PIB Chennai

வக்ஃப் சொத்துகளை நிர்வகிப்பதில் உள்ள பிரச்சனைகளைச் சரிசெய்வதை நோக்கமாக கொண்டு வக்ஃப் சட்டம் 1995-ல் திருத்தம் செய்து வக்ஃப் திருத்த மசோதா 2025-ல் கொண்டு வரப்பட்டது. வக்ஃப் என்பதற்கு காலத்திற்கேற்ற விளக்கத்தை அளிப்பது, பதிவு நடைமுறைகளை மேம்படுத்துவது வக்ஃப் ஆவணங்களை நிர்வகிக்க தொழில்நுட்பத்தின் பங்கை அதிகரிப்பது ஆகியவையும் இந்த மசோதாவின் நோக்கமாகும்.

இதன் அடிப்படையில் காலத்திற்கு ஒவ்வாத முசல்மான் வக்ஃப் சட்டம் 1923-ஐ நீக்கி, முசல்மான் வக்ஃப் (ரத்து) மசோதா 2025 கொண்டுவரப்பட்டது.  இதன்மூலம் வக்ஃப் சொத்துகளை நிர்வகிக்க ஒரே சீரான விதிகளை உறுதிசெய்ய முடியும். வக்ஃப் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை மற்றும் பதிலளிக்கும் கடமையை மேம்படுத்த முடியும். பழைய சட்டத்தால் ஏற்பட்ட குழப்பம் மற்றும் சட்ட முரண்பாடுகளை நீக்க முடியும்.

சில மாநிலங்களின் வக்ஃப் வாரியங்கள் தங்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது சமூகப் பதற்றங்களுக்கு வழிவகுத்தது. முந்தைய சட்டத்தின் 40-வது பிரிவு பரவலாக தவறாக பயன்படுத்தப்பட்டு தனியார் சொத்துகள் வக்ஃப் சொத்துக்கள் என அறிவிக்கப்பட்டது சட்டப் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.

பழைய சட்டத்தில் வக்ஃப் சொத்து பற்றி விசாரணை செய்யவும், தீர்மானிக்கவும் வக்ஃப் வாரியத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. புதிய சட்டத்தில் இது நீக்கப்பட்டுள்ளது.  மேலும் மாநில வருவாய் சட்டங்களின்படி வக்ஃப் சொத்துகளை  மதிப்பீடு செய்வதற்கும், நிலுவையில் உள்ள மதிப்பீடுகளுக்கு தீர்வு காணவும், மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

பழைய சட்டத்தில் மத்திய வக்ஃப் கவுன்சில் மத்திய, மாநில அரசுகளுக்கும், வக்ஃப் வாரியங்களுக்கும் ஆலோசனை வழங்குவதாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த கவுன்சிலில் குறைந்தபட்சம் 2 உறுப்பினர்கள் உட்பட  அனைவரும் முஸ்லிம்களாக இருந்தனர். புதிய சட்டத்தின் படி 2 பேர் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும்.  இந்த கவுன்சிலுக்கு நியமிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நீதிபதிகள்,  நிபுணத்துவம் பெற்றவர்கள்,  முஸ்லிம்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் இஸ்லாமிய சட்ட அறிஞர்கள், வக்ஃப் வாரிய தலைவர்கள், முஸ்லிம்களாக இருக்க வேண்டும். முஸ்லிம் உறுப்பினர்களில்  இரண்டு பேர் பெண்களாக இருக்க வேண்டும்.

முந்தைய சட்டத்தில் தீர்ப்பாயத்தின் முடிவே இறுதியானது. இதற்கு எதிராக நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்வது  தடுக்கப்பட்டிருந்தது.   இந்த நிலை மாற்றப்பட்டு 90 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய புதிய சட்டம் அனுமதிக்கிறது.

வக்ஃப் கணக்குகளை எந்தநேரமும் மாநில அரசுகள் தணிக்கை செய்ய முடியும் என்று பழைய சட்டம்  கூறியிருந்தது. புதிய சட்டத்தின்படி வக்ஃப் வாரிய பதிவு,  வக்ஃப் கணக்குகளை வெளியிடுதல், வக்ஃப் வாரிய நடவடிக்கைகளை வெளியிடுதல் தொடர்பாக  விதிகளை உருவாக்க மத்திய அரசுக்கு  அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.  இவற்றை தணிக்கை செய்ய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அல்லது வேறொரு அதிகாரியை நியமிக்க மத்திய அரசுக்கு புதிய சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

புதிய சட்டத்தின் இந்த கூறுகள் இந்தியாவில் வக்ஃப் சொத்து நிர்வாகத்தை நவீனமாக்குவதில் முக்கியமானவையாக விளங்குகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2118799

***

TS/SMB/AG/DL


(Release ID: 2119004) Visitor Counter : 71


Read this release in: English , Urdu , Hindi , Gujarati