கூட்டுறவு அமைச்சகம்
ஒவ்வொரு ஊராட்சி மற்றும் கிராமத்திலும் புதிய பன்னோக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பால், மீன்வள கூட்டுறவு சங்கங்கள்
Posted On:
02 APR 2025 3:31PM by PIB Chennai
பால்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம், தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம் , பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து பஞ்சாயத்துகள் / கிராமங்களையும் உள்ளடக்கும் வகையில் 2 லட்சம் புதிய பன்னோக்கு தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், பால்வளம் மற்றும் மீன்வள கூட்டுறவு சங்கங்களை உருவாக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு), தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் மாநில / யூனியன் பிரதேச அரசுகளின் உதவியுடன் இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசின் திட்டங்களை ஒருமுகப்படுத்துவதன் மூலம், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பால்வளம் மற்றும் மீன்வளக் கூட்டுறவுச் சங்கங்கள் தங்களின் நடவடிக்கைகளை விரிவுபடுத்த தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிக் கொள்ளலாம். பரிசோதனைக் கூடங்கள், மொத்த பால் குளிரூட்டும் மையங்கள், பால் பதனப்படுத்தும் அலகுகள், உயிரி தொகுதிக்கான குளங்கள் கட்டுதல், மீன் அங்காடிகள், மீன் குஞ்சு பொரிப்பகங்கள் அமைத்தல், ஆழ்கடல் மீன்பிடி கலன்கள் வாங்குதல் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்த இத்திட்டம் உதவுகிறது.
மேலும், வர்த்தக நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்யும் வகையில், அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கும் மாதிரி துணை விதிகளை மத்திய அரசு சுற்றறிக்கை மூலம் வெளியிட்டுள்ளது. இதன்படி, பால்வளம், மீன் வளர்ப்பு, மலர் சாகுபடி, கிடங்குகள் அமைத்தல், பதப்படுத்துதல், வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துதல், தனிப்பயன் வாடகை மையங்கள், பொது சேவை மையங்கள், நியாய விலைக் கடைகள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2117761
***
TS/SV/KPG/DL
(Release ID: 2117992)
Visitor Counter : 12