பாதுகாப்பு அமைச்சகம்
இரண்டாம் நாவிகா சாகர் பரிக்ரமா
Posted On:
01 APR 2025 10:51AM by PIB Chennai
நாவிகா சாகர் பரிக்கிரமா 2 பயணத்தின் நான்காவது கட்டத்தை நிறைவு செய்து, தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரை அடைந்த ஐ.என்.எஸ்.வி தாரிணி கப்பல் மற்றும் குழுவினரை கேப் டவுனில் உள்ள இந்திய துணைத் தூதர் திருமதி ரூபி ஜஸ்பிரீத், தென்னாப்பிரிக்கக் கடற்படையின் தலைமை தளபதி ரியர் அட்மிரல் லிசா ஹென்ட்ரிக்ஸ், பிரிட்டோரியாவில் உள்ள இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அதுல் சபாஹியா, தென்னாப்பிரிக்க கடற்படை இசைக்குழுவினர் உள்ளிட்டோர் துறைமுகத்திற்கு வரவேற்றனர்.
என்.எஸ்.பி. II பயணத்தை கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் கே திரிபாதி 02 அக்டோபர் 24 அன்று கோவாவில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் இந்தியக் கடற்படையின் இரண்டு பெண் அதிகாரிகளான லெப்டினன்ட் கமாண்டர் தில்னா மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் ரூபா ஆகியோர் இந்தியக் கடற்படை பாய்மரக் கப்பலில் (ஐ.என்.எஸ்.வி தாரிணி) பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பயணம் எட்டு மாதங்களில் 23,400 கடல் மைல்களுக்கு (தோராயமாக 43,300 கிலோமீட்டர்) மேல் செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2025 மே மாதத்தில் கோவாவுக்குத் திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயணம் இதுவரை ஃப்ரீமாண்டில் (ஆஸ்திரேலியா), லிட்டில்டன் (நியூசிலாந்து), போர்ட் ஸ்டான்லி, ஃபாக்லாந்து (இங்கிலாந்து) ஆகிய மூன்று இடங்களில் நின்று சென்றது.
திட்டமிடப்பட்ட பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புக்காக கப்பல் ராயல் கேப் யாட் கிளப்பில் இரண்டு வாரங்களுக்கு இருக்கும். இந்தக் கப்பலின் குழுவினர் சைமன் டவுன் கடற்படை தளம் மற்றும் கோர்டன் பே கடற்படை கல்லூரியில் தென்னாப்பிரிக்க கடற்படையுடன் இணைந்து பங்கேற்பார்கள். அவர்கள் தங்கியிருக்கும் காலத்தில் சமூகப் பங்கேற்பு நிகழ்வுகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளன.
கப்பலும் குழுவினரும் கொந்தளிப்பான கடல், கடும் குளிரான தட்பவெப்ப நிலையையும், புயல் வீசும் தட்பவெப்ப நிலையையும் எதிர்கொண்டு சுற்றுப் பயணத்தை மிகவும் சவாலானதாக ஆக்கியுள்ளார். இந்தப் பாதையில் இதுவரை 50 நாட் ஆளவுக்கும் (93 கி.மீ) அதிகமான காற்று மற்றும் 7 மீட்டர் (23 அடி) உயரம் வரை அலைகள் எழுந்தன.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்.வி தாரிணி 56 அடி நீள பாய்மரக் கப்பலாகும். இது 2018-ம் ஆண்டில் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இதற்கு முன்பு இதுபோன்ற பல பயணங்களில் அது பங்கேற்றுள்ளது. இந்தக் கப்பல் இந்திய அரசின் ' இந்தியாவில் தயாரியுங்கள்' மற்றும் தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் உண்மையான சான்றாகும்.
நாவிகா சாகர் பரிக்கிரமா-II பயணம் இந்திய ஆயுதப் படைகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை ஊக்குவிக்கிறது மற்றும் பல இளம் பெண்களைச் சேவைகளில் குறிப்பாக இந்திய கடற்படையில் சேர ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பதிப்பு கடல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கேப்டவுனில் தாரிணி நிறுத்தம் இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே வளர்ந்து வரும் உறவுகளையும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நட்பு நாடுகளுடன் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா எவ்வாறு உறுதிபூண்டுள்ளது என்பதையும் வெளிப்படுத்துகிறது.
சமீபத்தில், இந்தியக் கடற்படை கப்பல் தல்வார் தென்னாப்பிரிக்காவில் 2024 அக்டோபரில் நடைபெற்ற இப்சாமர் பயிற்சியின் 8-வது பதிப்பில் பங்கேற்று இருந்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் ஐஎன்எஸ் துஷில் டர்பனில் துறைமுகத்திற்கு வருகை தந்து, தென்னாப்பிரிக்க கடற்படை மற்றும் குவா-ஜூலு நடாலில் உள்ள இந்திய சமூகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இத்தகைய பயணங்கள் மற்றும் ஈடுபாடுகள் கடல்சார் களத்தில் பொதுவான சவால்களை எதிர்கொள்ளவும், பாதுகாப்பான கடல்களை உறுதி செய்வதற்கான சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ளவும் கடற்படைகளை ஒன்றிணைக்கின்றன.
தாரிணி கப்பல் ஏப்ரல் 15-ம் தேதியன்று கேப்டவுனில் இருந்து புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
***
(Release ID: 2117120)
TS/PKV/RR/SG
(Release ID: 2117170)
Visitor Counter : 23