அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஆந்திரப் பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் திரு சத்ய குமார், மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்தார்
ஆந்திராவின் உயிரி தொழில்நுட்ப முயற்சிகளுக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும்: டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
31 MAR 2025 4:25PM by PIB Chennai
ஆந்திராவின் சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஒய். சத்ய குமார், மத்திய அறிவியல் தொழில்நுட்ப இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை தில்லியில் இன்று சந்தித்துப் பேசினார். உயிரி தொழில்நுட்பத் துறையில் மாநிலத்தின் முயற்சிகளுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பை அவர் கோரினார்.
கலந்துரையாடலின் போது, மாநிலத்தில் உயிரி தொழில்நுட்பம் தொடர்பான திட்டங்களை மேம்படுத்துவதற்கான வழிகளை இரு தலைவர்களும் ஆராய்ந்தனர்.
ஆந்திராவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தொடர்ச்சியான உதவிகளுக்கு நன்றி தெரிவித்த சத்ய குமார், சுகாதார முன்னேற்றங்கள், தொழில்துறை பயன்பாடுகள் ஆகியவற்றில் உயிரி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான ஆந்திராவின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். மாநிலத்திற்கு அதிநவீன கண்டுபிடிப்புகளை கொண்டு வர மத்திய அரசு ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
டாக்டர் ஜிதேந்திர சிங், மத்திய அரசு முழு ஆதரவு வழங்கும் என உறுதியளித்தார். தற்போதைய மத்திய அரசு, உயிரி தொழில்நுட்பத்தை ஒரு முன்னுரிமைத் துறையாகக் கருதி திட்டங்களைச் செயல்படுத்துகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். சுகாதாரம், மருந்துகள், புத்தொழில்கள் போன்ற துறைகளில் உயிரி தொழில்நுட்பத்தின் திறனை எடுத்துரைத்த அவர், இதுபோன்ற முன்னேற்றங்களை விரைந்து அடைவதில் ஆந்திரா முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார்.
கடந்த பல ஆண்டுகளாக, இந்தியாவின் உயிரி தொழில்நுட்பத் துறையில், உயிரி மருந்து ஆராய்ச்சி, கடல்சார் உயிரி தொழில்நுட்பம், வேளாண் உயிரி தொழில்நுட்பத் தீர்வுகள் போன்ற துறைகளில் ஆந்திரப் பிரதேசம் ஒரு முக்கிய பங்களிப்பாளராக உருவெடுத்துள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார். புத்தாக்கத்தையும் தொழில்முனைவையும் ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பல உயிரி தொழில்நுட்ப தொழில் பாதுகாப்பகங்களையும் ஆராய்ச்சி நிறுவனங்களையும் இம்மாநிலம் கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார். இத்துறையில் புதிய உந்துதல் இந்தியாவின் பரந்த உயிரி தொழில்நுட்பத் திட்டத்தில் இம்மாநிலத்தை மேலும் ஒருங்கிணைக்கும் என திரு ஜிதேந்திர சிங் கூறினார்.
***
TS/PLM/KV
(Release ID: 2117041)
Visitor Counter : 19