வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
சிக்கிமில் இருந்து சாலமன் தீவுகளுக்கு புவிசார் குறியீடு கொண்ட டல்லே மிளகாயை ஏற்றுமதி செய்ய அபேடா உதவியுள்ளது
Posted On:
24 MAR 2025 3:19PM by PIB Chennai
மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடா, புவிசார் குறியீடு கொண்ட டல்லே மிளகாயின் முதல் தொகுப்பை சிக்கிமில் இருந்து சாலமன் தீவுகளுக்கு வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளது. இந்த குறிப்பிடத்தக்க சாதனை உலகளாவிய இயற்கை வேளாண்மைச் சந்தையில் இந்தியாவின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
அத்துடன் வடகிழக்கு பகுதியிலிருந்து உயர்தர உற்பத்தி பொருட்களுக்கான சர்வதேச தேவை அதிகரித்து வருவதை இது எடுத்துக்காட்டுகிறது. ஃபயர் பால் சில்லி அல்லது டல்லே குர்சானி என்றும் அழைக்கப்படும் டல்லே மிளகாய், அதன் தீவிரமான காரத்தன்மை, பிரகாசமான சிவப்பு நிறம் மற்றும் அதிக ஊட்டச்சத்து மதிப்பு ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. பொட்டாசியத்துடன் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ சத்துகள் நிறைந்த இது, சமையல் மற்றும் மருத்துவ பயன்பாடுகளுக்கு விரும்பப்படும் மசாலா பொருளாக உள்ளது.
சாலமன் தீவுகளுக்கு டல்லே மிளகாயை ஏற்றுமதி செய்வது உலகளாவிய மசாலா பொருட்கள் வரைபடத்தில் சிக்கிமின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது சர்வதேச வர்த்தகத்திற்கான புதிய வழிகளைத் திறக்கும். அதன் சிறந்த பருவநிலை மற்றும் வளமான மண்ணுடன், சிக்கிம் உலகளாவிய மசாலா பொருட்கள் தொழில்துறையில் ஒரு முக்கிய இடமாக உருவெடுக்கும் திறனைக் கொண்டுள்ளது.
***
TS/PLM/LDN/KR/DL
(Release ID: 2114526)
Visitor Counter : 45