பாதுகாப்பு அமைச்சகம்
கோவா கப்பல் கட்டும் தளம், இரண்டாவது பி 1135.6, தவஸ்யா போர்க்கப்பலை அறிமுகப்படுத்தியது
Posted On:
22 MAR 2025 1:51PM by PIB Chennai
இந்தியாவின் முதன்மையான பாதுகாப்பு கப்பல் கட்டும் தளங்களில் ஒன்றான கோவா ஷிப்யார்ட் லிமிடெட் (GSL), இன்று (2025 மார்ச் 22) ப்ராஜெக்ட் 1135.6 (யார்டு 1259)-ன் இரண்டாவது போர்க்கப்பலான 'தவஸ்யா'வை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அது மற்றொரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த அறிமுகம் போர்க்கப்பல் கட்டுமானத்தில் இந்தியாவின் சுயசார்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இது பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பு இந்தியா என்ற நாட்டின் பார்வையை வலுப்படுத்துகிறது.
இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், மாண்புமிகு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய இணையமைச்சர், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை பாதிக்கும் புவிசார் அரசியல் சவால்களுக்கு இடையிலும், குறுகிய காலமான எட்டு மாதங்களுக்குள் இரண்டு சிக்கலான, ஆயுதம் ஏந்திய போர்க்கப்பல்களை அறிமுகப்படுத்திய கோவா கப்பல் கட்டும் தளத்தின் அசாதாரண சாதனையைப் பாராட்டினார். கடற்படையின் வளர்ந்து வரும் சுயசார்பை அவர் எடுத்துரைத்தார்.
இந்தக் கப்பலின் அறிமுகம் இந்தியாவின் கடற்படை வரலாற்றில் ஒரு முக்கிய தருணம் என்று அவர் கூறினார். இது நமது தொழில்நுட்ப திறன்களையும், தன்னம்பிக்கைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது என அவர் குறிப்பிட்டார். பிரமோஸ் ஏவுகணை அமைப்பு, டார்பிடோ லாஞ்சர்கள், சோனார், துணை கட்டுப்பாட்டு அமைப்புகள் போன்ற முக்கியமான அம்சங்களை வெற்றிகரமாக உள்ளூரில் உற்பத்தி செய்யும் இந்தியாவின் கப்பல் கட்டும் சூழல் அமைப்பின் திறனை அமைச்சர் பாராட்டினார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சிறந்த திறனை உறுதி செய்யும் பல்வேறு வகையான தாக்குதல், தற்காப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தும் வகையில் 'தவஸ்யா' வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட அம்சங்கள், உயர் திறன்கள், அடுத்த தலைமுறை போர் அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்ட இந்த கப்பல் இந்திய கடற்படையின் செயல்பாட்டு வலிமைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கிறது என்று அமைச்சர் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய கோவா கப்பல் கட்டும் தளத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான திரு பிரஜேஷ் குமார் உபாத்யாய், தேசத்தின் பாதுகாப்புச் சொத்தாக உள்ள இந்தக் கப்பல் கட்டும் தளத்தின் குறிப்பிடத்தக்க பரிணாம வளர்ச்சியை எடுத்துரைத்தார். உள்நாட்டு போர்க்கப்பல் கட்டுமானத்தில் சிறந்து விளங்குவதற்கான இந்த தளத்தின் இடைவிடாத முயற்சியின் உச்சக்கட்டமாக 'தவஸ்யா' வடிவமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
***
PLM/KV
(Release ID: 2114038)
Visitor Counter : 36