சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்
Posted On:
21 MAR 2025 4:03PM by PIB Chennai
மனிதப் பயன்பாட்டிற்கு பாதுகாப்பான, தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (FSSAI) 2008-ம் ஆண்டில் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006-ன் கீழ் ஏற்படுத்தப்பட்டது. உணவுப் பொருட்களுக்கான அறிவியல் அடிப்படையிலான தரநிலைகளை நிர்ணயிப்பதற்கும், அவற்றின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், விற்பனை, இறக்குமதி சார்ந்த நடவடிக்கைகளைச் சீரமைப்பது ஆகியவை இந்நிறுவனத்தின் முதன்மை பணிகளாக உள்ளன. உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணயச் சட்டம், 2006-ன்படி மற்றும் அதன் விதிமுறைகள் 2011-ன்படி ஆறு முதன்மை ஒழுங்குமுறை விதிகள் அறிவிக்கை செய்யப்பட்டு 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அதன் மண்டல அலுவலகங்கள் மூலம் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் குறித்த வழக்கமான கண்காணிப்பு, ஆய்வு மற்றும், விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து தொடர் கண்காணிப்பை இந்த நிறுவனம் உறுதிசெய்கிறது.
இச்சட்டத்தின் கீழ் தர நிலைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்கும் வகையில், பல்வேறு உணவுப் பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகளை மேற்கொள்கிறது. விதிமுறைகளைப் பின்பற்றாத வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு நுகரப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, உணவுப் பொருட்கள், குறிப்பாக முக்கிய உணவுகள் மற்றும் கலப்படம் செய்யப்படும் உணவு பொருட்கள் குறித்து நாடு முழுவதும் அவ்வப்போது இந்நிறுவனம் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113681
***
TS/SV/AG/RR
(Release ID: 2113790)
Visitor Counter : 35