குடியரசுத் தலைவர் செயலகம்
நியூசிலாந்து பிரதமர், குடியரசுத்தலைவருடன் சந்திப்பு
Posted On:
17 MAR 2025 6:01PM by PIB Chennai
நியூசிலாந்து பிரதமர் ரைட் ஹானரபிள் திரு கிறிஸ்டோபர் லக்சன் இன்று (மார்ச் 17, 2025) குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்துப் பேசினார்.
குடியரசுத்தலைவர் மாளிகையில் பிரதமர் திரு லக்சன் மற்றும் அவரது குழுவினரை வரவேற்ற குடியரசுத்தலைவர், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையேயான வலுவான உறவுகள் ஆகியவற்றில் வேரூன்றியுள்ள பகிரப்பட்ட மாண்புகளின் அடிப்படையில் இந்தியாவும் நியூசிலாந்தும் நெருக்கமான மற்றும் நட்புறவைக் கொண்டுள்ளன என்று கூறினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூசிலாந்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டதை நினைவுகூர்ந்த குடியரசுத்தலைவர், நியூசிலாந்தின் இயற்கை அழகும், அந்நாட்டு மக்களின் கலாச்சார பன்முகத்தன்மையும் தனது மனதில் அழியாத முத்திரையை பதித்திருப்பதாகக் கூறினார்.
இந்திய-நியூசிலாந்து உறவுகளில் கல்விப் பரிமாற்றம் முக்கிய அம்சம் என்று குடியரசுத்தலைவர் கூறினார். நிறுவன பரிமாற்றங்கள், இந்தியாவில் நியூசிலாந்து பல்கலைக்கழகங்கள் வளாகங்களை அமைத்தல் மற்றும் இரட்டை பட்டங்கள் ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான மகத்தான வாய்ப்புகளை அவர் எடுத்துரைத்தார். சுங்கம், தோட்டக்கலை, வனவியல், பேரிடர் மேலாண்மை மற்றும் பாரம்பரிய மருத்துவம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகள் உட்பட இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளின் வளர்ச்சி குறித்தும் அவர் திருப்தி தெரிவித்தார்.
நியூசிலாந்தின் முன்னேற்றத்திற்கு திறமையான மற்றும் கடினமாக உழைக்கும் இந்திய சமுதாயத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை குடியரசுத்தலைவர் பாராட்டினார்.
2024 ஆகஸ்டில் நியூசிலாந்துக்கு குடியரசுத்தலைவர் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமும், பிரதமர் திரு லக்சனின் பயணத்தின்போது இன்று அறிவிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க முடிவுகளும் இந்திய-நியூசிலாந்து இடையேயான உறவுக்கு சாதகமான உத்வேகத்தை அளிக்கும் என்று இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
***
RB/DL
(Release ID: 2112041)
Visitor Counter : 16