அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

கியூபா துணைப் பிரதமர் டாக்டர் எட்வர்டோ மார்டினெஸ் டயஸ் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்தார்

Posted On: 17 MAR 2025 6:07PM by PIB Chennai

அறிவியல், தொழில்நுட்பத்தில், குறிப்பாக உயிரி தொழில்நுட்பம், உயிரி உற்பத்தி ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான தங்கள் நிலையை இந்தியாவும் கியூபாவும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. கியூபா துணை பிரதமர் டாக்டர் எட்வர்டோ மார்டினெஸ் டயஸ், மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை இன்று புதுதில்லியில் சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளின் 65-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, மருத்துவ ஆராய்ச்சி, தடுப்பூசி மேம்பாடு, நிலையான உயிரி உற்பத்தி ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின் போது பேசிய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்த கூட்டு ஆராய்ச்சி அவசியம் என்று வலியுறுத்தினார். உலகின் மிகச் சிறந்தவர்களுடன் கைகோர்ப்பதும், இலக்கு கொண்ட ஆராய்ச்சியை மேற்கொள்வதும் இந்தியாவின் அறிவியல் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று அவர் குறிப்பிட்டார்.

நீண்டகால நன்மைகளுடன் சமூக-பொருளாதார, சுற்றுச்சூழல் சவால்களை சமாளிக்க கூட்டு ஆராய்ச்சியில் உயிரி தொழில்நுட்பத் துறை அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

உயிரி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், உயிரி பொருளாதார கட்டமைப்பை வரையறுப்பதில் உயிரி தொழில்நுட்பத்துறை முக்கிய பங்காற்றுவதாக குறிப்பிட்டார்.

டாக்டர் எட்வர்டோ மார்டினெஸ் டயஸ் பேசுகையில், உயிரி தொழில்நுட்பத்தில், இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஆர்வம் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் இரு நாட்டு மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

***

TS/PLM/AG/DL


(Release ID: 2111990)
Read this release in: English , Urdu , Hindi , Punjabi