பாதுகாப்பு அமைச்சகம்
தீவிரவாத எதிர்ப்பு குறித்த ஏடிஎம்எம் பிளஸ் நிபுணர்கள் பணிக்குழுக் கூட்டம் புதுதில்லியில் நடைபெறுகிறது
Posted On:
16 MAR 2025 10:31AM by PIB Chennai
ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் (ADMM), நிபுணர்கள் பணிக்குழுவின் (EWG) 14-வது கூட்டம், 2025 மார்ச் 19 முதல் 20 வரை புதுதில்லியில் நடைபெறும். இந்தியாவும் மலேசியாவும் கூட்டத்திற்கு தலைமை வகிக்கும். 10 ஆசியான் உறுப்பு நாடுகளான புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோ ஜனநாயக குடியரசு, மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், வியட்நாம், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளும் எட்டு பேச்சுவார்த்தை நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கொரிய குடியரசு, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ரஷ்யா ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
முதல் முறையாக பயங்கரவாத எதிர்ப்பு குறித்த நிபுணர் பணிக்குழுக் கூட்டத்துக்கு இந்தியா தலைமை வகிக்கிறது. 2025 மார்ச் 19 அன்று, பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் தொடக்க விழாவில் முக்கிய உரையாற்றுவார்.
2024 முதல் 2027 வரை நடைபெற்று வரும் சுழற்சியில் பயங்கரவாத எதிர்ப்பு குறித்த நிபுணர் பணிக்குழுவின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளுக்கான முதல் கூட்டம் இதுவாகும். தீவிரவாத அச்சுறுத்தலைச் சமாளிக்க வடிவமைக்கப்பட்ட வலுவான, விரிவான உத்தியை உருவாக்குவது தொடர்பான விவாதங்கள் இக்கூட்டத்தில் இடம்பெறும். ஆசியான் பாதுகாப்புப் படைகள், அதன் பேச்சுவார்த்தை நாடுகளின் கள அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதை இந்த கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது 2024-2027 சுழற்சியில் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள், பயிற்சிகள், கருத்தரங்குகள், பயிலரங்குகளுக்கு அடித்தளம் அமைக்கும்.
பங்கேற்கும் நாடுகளின் பாதுகாப்பு நிறுவனங்களிடையே நடைமுறை ஒத்துழைப்புக்கான தளமாக ஏடிஎம்எம் பிளஸ் (ADMM-Plus) கூட்டம் செயல்படுகிறது. பயங்கரவாத எதிர்ப்பு, கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி, பேரிடர் மேலாண்மை, அமைதி காக்கும் நடவடிக்கைகள், ராணுவ மருத்துவம், மனிதாபிமான சுரங்க நடவடிக்கை, சைபர் பாதுகாப்பு ஆகிய ஏழு நடைமுறை ஒத்துழைப்பு பகுதிகளில் இது தற்போது கவனம் செலுத்துகிறது. இந்தத் துறைகளில் ஒத்துழைப்பை எளிதாக்க நிபுணர் பணிக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன.
----
PLM/DL
(Release ID: 2111592)
Visitor Counter : 28