சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: கடல்சார் உயிர்கள் பாதுகாப்பு
Posted On:
10 MAR 2025 1:24PM by PIB Chennai
கடல்சார் உயிர்கள் பாதுகாப்பு உத்திகளை செயல்படுத்துதல், கண்காணித்தல் ஆகியவற்றுக்காக மேம்பட்ட தொழில்நுட்பங்களை கொள்கை கட்டமைப்புகளுடன் ஒருங்கிணைத்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. செயற்கைக்கோள் படங்கள், தொலையுணர் தொழில்நுட்பங்கள் ஆகியவை இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. சி-போட் போன்ற தொழில்நுட்பங்கள் கடல் மேற்பரப்பு வெப்பநிலை, உப்புத்தன்மை, நீரின் தரம் மற்றும் பவள ஆரோக்கியம் உள்ளிட்ட கடல் நிலைமைகளைக் கண்காணிக்கப் பயன்படுகின்றன. இந்தத் தொழில்நுட்பங்கள் பவள சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும், பருவநிலை பின்னடைவை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பதற்கும், சட்டவிரோத மீன்பிடித்தலைக் கண்டறிவதற்கும், பவளப்பாறைகள் மற்றும் கடலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை கண்காணிப்பதற்கும் கொள்கை வகுப்பதில் உதவுகின்றன.
நாட்டில் செயற்கை திட்டுகளை நிறுவுவது என்பது கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதற்கும், பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதற்கும், நிலையான மீன்பிடி நடைமுறைகளை ஆதரிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். செயற்கை திட்டுகள் என்பவை இயற்கை வாழ்விடங்களை புதுப்பிக்க மற்றும் / அல்லது மேம்படுத்தவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் வாழ்விட மேம்பாடு உள்ளிட்ட நீர்வாழ் வளங்களை நிர்வகிக்கவும் வடிவமைக்கப்பட்ட பொறியியல் முறைகள் ஆகும். இந்திய விலங்கியல் ஆய்வு மையம் பவளப்பாறைகளை மறுசீரமைப்பு மற்றும் இடமாற்றம் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்திய விலங்கியல் ஆய்வு மையம் தலைமையிலான இந்தியாவின் மிகப்பெரிய பவள இடமாற்றத் திட்டம், 16,522 பவளப்பாறைகளை இடைநிலை மற்றும் துணை அலை மண்டலங்களிலிருந்து குஜராத்தின் நராராவைச் சுற்றியுள்ள பொருத்தமான தளங்களுக்கு மாற்றும் பணியை மேற்கொண்டுள்ளது. கூடுதலாக, கடல் பல்லுயிரியலின் நீண்டகால பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2,000 பவள சிமெண்ட் திட்டுகள்( செயற்கை பவளத் திட்டுகள்)உத்திப்பூர்வமாக அமைக்கப்பட்டுள்ளன. நீர்வாழ் உயிரினங்களை மீட்டெடுப்பதை ஊக்குவிப்பதற்காக பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.176.81 கோடி முதலீட்டில் 11 கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 937 செயற்கை பவளத் திட்டுகளை அமைக்க மீன்வளத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109802
----
TS/IR/KPG/KR
(Release ID: 2109838)
Visitor Counter : 35