பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
'குடிமைப்பணிகளில் மகளிர்' குறித்த இணையவழி வட்டமேசை கூட்டம்: மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை நடத்தியது
Posted On:
06 MAR 2025 6:16PM by PIB Chennai
பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் உலக அளவில் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இன்று (06.03.2025) மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்பு துறை குடிமைப்பணிகளில் பெண்கள் என்ற கருப்பொருளில் ஒரு இணைய வழி வட்ட மேசை கூட்டத்தை நடத்தியது.
நிர்வாக சீர்திருத்தங்கள் துறை செயலாளர் திரு வி. ஸ்ரீனிவாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். மாற்றத்துக்கான உந்து சக்தியாக இருக்கும் அடுத்த தலைமுறையினரான இளம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா, சுதந்திரத்திற்குப் பிறகு குடிமைப்பணிகளின் கதவுகள் பெண்களுக்காக எப்படி திறக்கப்பட்டன என்பதை எடுத்துரைத்தார். மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு போன்ற சட்டங்கள் பெண்கள் தங்கள் குடும்பக் கடமைகளை சமநிலையாக நிறைவேற்ற உதவுவதோடு, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சிறப்பாக அவர்கள் பங்களிக்க உதவியுள்ளது என்பதையும் அவர் விளக்கினார். கடந்த ஆறு ஆண்டுகளில் பெண் தொழிலாளர் பங்களிப்பில் இந்தியா முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அஞ்சல் துறை செயலாளர் திருமதி வந்திதா கவுல், செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார். குடிமைப்பணித் தேர்வுத் தயாரிப்புகளின் போது ஒரு பெண்ணாக தாம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது குறித்த தமது தனிப்பட்ட அனுபவங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். இணையவழிக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் 250-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
***
TS/PLM/AG/DL
(Release ID: 2108910)
Visitor Counter : 22