கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
நீர்வழிப் போக்குவரத்து மூலம் நதி சொகுசுக் கப்பல் சுற்றுலாவை மேம்படுத்த ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துடன் இந்திய நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் - மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் முன்னிலையில் கையெழுத்தானது
Posted On:
06 MAR 2025 4:29PM by PIB Chennai
துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து ஆணையம் (IWAI) ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மத்திய துறைமுகங்கள், கப்பல் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், இணையமைச்சர் திரு சாந்தனு தாக்கூர் ஆகியோர் முன்னிலையில் ஸ்ரீநகரில் நடைபெற்ற சிந்தனை முகாம் நிகழ்ச்சியின் போது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் இந்தியாவில் நதி சொகுசுக் கப்பல் சுற்றுலாவைத் தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர் அரசுடனான இந்த ஒப்பந்தம், நதி சொகுசு கப்பல் சுற்றுலாவை மேலும் மேம்படுத்துதல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், ஜம்மு-காஷ்மீரில் உள்ள நதிகளில் கப்பல் சுற்றுலாவை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாட்டில் உள்ள 111 தேசிய நீர்வழிகளில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மூன்று தேசிய நீர்வழிகள் உள்ளன. அவை செனாப் நதி நீர் வழி (NW-26), ஜீலம் நதி நீர் வழி (NW-49), ரவி நதி நீர் வழி (NW-84) ஆகியவை ஆகும். நதி சொகுசு கப்பல் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்குடன், சமீபத்தில் முடிவடைந்த உள்நாட்டு நீர்வழிகள் மேம்பாட்டு கவுன்சிலின் (IWDC) இரண்டாவது கூட்டத்தில், காஷ்மீர் முதல் கேரளா வரையிலும், அசாம் முதல் குஜராத் வரையிலும் பல்வேறு கப்பல் சுற்றுலா வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டன. இரண்டு மாத காலத்திற்குள், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நதிக் கப்பல் சுற்றுலாவை சுமார் ரூ. 100 கோடி செலவில் மேம்படுத்த நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், 10 மிதக்கும் தோணித்துறைகள், காத்திருப்பு அறை, கப்பல் பயணிகளுக்கான இதர வசதிகளை உள்ளடக்கிய கரையோர உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.
***
(Release ID: 2108820)
TS/PLM/AG/KR
(Release ID: 2108858)
Visitor Counter : 60