பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
மகளிருக்கு உகந்த கிராம பஞ்சாயத்து மாதிரி திட்டம் தொடக்கம்; ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரி கிராம பஞ்சாயத்து உருவாக்கப்படும்
Posted On:
05 MAR 2025 6:50PM by PIB Chennai
நாடு முழுவதும் மாவட்ட அளவில் மாதிரி கிராம பஞ்சாயத்து அமைப்பதை நோக்கமாகக் கொண்டு புதுதில்லியில் இன்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் பெண்களுக்கு உகந்த கிராம பஞ்சாயத்து குறித்த தேசிய மாநாடு நடைபெற்றது. சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த மாநாட்டில், நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 1500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் நேரடியாகவும் மற்றும் காணொலி மூலமும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மத்திய அரசின் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். மத்திய அரசின் திட்டங்கள் மிகவும் பின்தங்கியவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கு முக்கிய பங்கு இருப்பதாக அவர் கூறினார். சமூக சுகாதாரத்திற்கான வலுவான கட்டமைப்பை உருவாக்கும் கிராம சுகாதாரம், துப்புரவு மற்றும் ஊட்டச்சத்துக் குழு ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் உள்ளதாக அவர் தெரிவித்தார். முதியோர் பராமரிப்பு, புற்றுநோய், தொலை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனை உள்ளிட்ட 12 வகையான மருத்துவ சேவைகளை மத்திய சுகாதாரத்துறை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதிகபட்ச மக்கள் பயனடையும் வகையில் அரசின் இந்த முயற்சிகள் குறித்து பஞ்சாயத்து பெண் தலைவர்கள் தங்கள் பகுதி மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108572
***
TS/GK/RJ/DL
(Release ID: 2108615)
Visitor Counter : 28