வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் அணுசக்தி குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
Posted On:
04 MAR 2025 6:22PM by PIB Chennai
நிதி ஆயோக் ஏற்பாடு செய்த 2025-26 மத்திய பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கின் ஒரு பகுதியாக, உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் அணுசக்தி பணிகள் என்ற தலைப்புகளில் விவாதங்களை உள்ளடக்கிய அமர்வுகள் இன்று (மார்ச் 4, 2025) வெற்றிகரமாக நடத்தப்பட்டன. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. தொழில்துறை தலைவர்கள், ஏற்றுமதியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்து, இந்தியாவின் ஏற்றுமதித் திறன்களை மேம்படுத்துவதற்கும் நாட்டின் உலகளாவிய வர்த்தக நிலையை வலுப்படுத்துவதற்கும் தேவையான உத்திகள் குறித்து ஏற்றுமதி அமர்வு விவாதித்தது.
தொடக்கத்தில், இணையவழிக் கருத்தரங்கில் பங்கேற்றவர்களிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். நாட்டில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான ஒரு சூழல் அமைப்பை உருவாக்க அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களையும், 2025-26 மத்திய பட்ஜெட்டின் மாற்றத்திற்கான அணுகுமுறையையும் அவர் எடுத்துரைத்தார். இது அரசால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் சார்ந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப உள்ளது. உலகிற்கு இந்தியாவின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் உற்பத்தி, ஏற்றுமதி, அணுசக்தி ஆகிய கருப்பொருள்களில் புதுமையான யோசனைகளுடன் முன்வந்து கொள்கை உருவாக்கம் மற்றும் செயல்படுத்தலுக்கு பங்களிக்குமாறு பங்கேற்பாளர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். அவரது கருத்துக்கள் அனைத்து பங்குதாரர்களாலும் பாராட்டப்பட்டன. மேலும் பல்வேறு கருப்பொருள்கள் குறித்த அடுத்தடுத்த விவாதத்தை வடிவமைத்தன.
இந்த விவாதங்களின் போது, இந்தியாவின் ஏற்றுமதியை வலுப்படுத்துவதற்கான சாத்தியமான பாதைகளாக பல முக்கிய முயற்சிகள் விவாதிக்கப்பட்டன. இவற்றில், நிதி ஊக்குவிப்பு, சந்தை அணுகல் ஆதரவு மற்றும் இணக்க வசதிகளை வழங்குவதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதிகளை, குறிப்பாக எம்எஸ்எம்இ-களுக்கு, உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ரூ. 2,250 கோடி மதிப்பில் முன்மொழியப்பட்டுள்ள ஏற்றுமதி ஊக்குவிப்பு இயக்கமும் அடங்கும். சந்தை அணுகல் சிக்கல்களைத் தீர்க்கவும், புதிய மற்றும் மின் வணிக ஏற்றுமதியாளர்களின் வளர்ச்சியை எளிதாக்கவும் கூட்டாண்மை சார்ந்த, முழுமையான அரசு அணுகுமுறை தேவை என்பதை பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் திரு ஜிதின் பிரசாதாவின் நிறைவுரையுடன் அமர்வு நிறைவடைந்தது. உலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்த ஏற்றுமதி சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும், இந்திய நிறுவனங்கள் உலகளாவிய மதிப்புத் தொடர்களில் தடையற்ற ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்கும் அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைத்தார்.
ஏற்றுமதிகள் குறித்த வெற்றிகரமான அமர்வு, தொழில் வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோரின் முக்கிய கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்று, எதிர்காலத்திற்கான செயல்பாட்டுத் திட்டத்தை வழங்கியுள்ளது. கொள்கை சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மாற்றம் மூலம் இந்தியாவின் ஏற்றுமதியை வலுப்படுத்துவதற்கான எதிர்காலக் கொள்கைகளை வடிவமைப்பதில் இந்த விவாதங்கள் முக்கிய பங்கு வகிக்கும். அமர்வின் முக்கிய முடிவுகள் அந்தந்தத் துறைகளால் செயல்படுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108151
***
TS/SMB/DL
(Release ID: 2108204)
Visitor Counter : 10