குடியரசுத் தலைவர் செயலகம்
உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மாநாடு 2024-25-ஐ குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்
Posted On:
03 MAR 2025 6:45PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (மார்ச் 3, 2025) உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாட்டை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார். நாட்டில் உள்ள 184 மத்திய உயர்கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் குடியரசுத்தலைவர் உள்ளார்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், எந்தவொரு நாட்டின் வளர்ச்சியின் தரமும் அதன் கல்வி முறையின் தரத்தில் பிரதிபலிக்கிறது என்று கூறினார். அறிவுசார் பொருளாதாரத்தின் முக்கிய மையமாக இந்தியாவை உருவாக்கும் இலக்கை அடைவதில் உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்களுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அவர் கூறினார். கல்வியுடன் ஆராய்ச்சியிலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். மத்திய அரசு ஒரு சிறந்த நோக்கத்துடன் தேசிய ஆராய்ச்சி நிதியத்தை நிறுவியுள்ளது என்று அவர் கூறினார். உயர்கல்வி நிறுவனங்கள் இந்த முக்கியமான முன்முயற்சியை நன்கு பயன்படுத்திக் கொண்டு ஆராய்ச்சிப் படிப்புகளை ஊக்குவிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்
நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் உலக அளவில் அங்கீகாரம் பெற வேண்டும், ஆய்வுகளுக்கான காப்புரிமைகள் உலகில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியாவை உயர்கல்விக்கான விருப்பமான இடமாக தேர்வு செய்ய வேண்டும் ஆகியவையே உயர்கல்வி நிறுவனங்களின் லட்சியமாக இருக்க வேண்டும் என்று குடியரசுத்தலைவர் கேட்டுக் கொண்டார்.
இந்தியாவில் இருந்து வரும் மாணவர்கள் தங்களது திறமைகளால் உலகின் முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும் வளர்ச்சியடைந்த பொருளாதார நாடுகளை மேலும் வளப்படுத்துகிறார்கள் என்று குடியரசுத்தலைவர் கூறினார். அவர்களின் திறமையை உள்நாட்டில் பயன்படுத்தத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இந்தியாவை உலகின் அறிவுசார் வல்லரசு நாடாக உருவாக்குவதே தேசிய இலக்காக இருக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார். ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளை உலக நாடுகள் பின்பற்ற ஆர்வத்துடன் இருந்தால் மட்டுமே இந்த இலக்க எட்ட முடியும் என்று அவர் கூறினார்.
நாட்டின் பல உயர்கல்வி நிறுவனங்கள் உலக அளவில் சிறந்த நன்மதிப்பைக் கொண்டுள்ளன என்று குடியரசுத்தலைவர் கூறினார். இந்த நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் பெரிய பொறுப்புகளை வகிப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், அனைத்து நிறுவனங்களும் மிக விரைவான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றும் இளைஞர்களின் அளப்பரிய திறமைகளைப் பயன்படுத்துவதன் மூலம் உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்களின் தலைமைத்துவம் அங்கீகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2107822
----
TS/SV/KPG/DL
(Release ID: 2107880)
Visitor Counter : 20