பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியடைகிறது, அடுத்த 5 ஆண்டுகளில் 300-350 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

Posted On: 24 FEB 2025 3:22PM by PIB Chennai

இந்தியாவின் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியடைந்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 300-350 பில்லியன் அமெரிக்க டாலரை இது எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1.25 லட்சம் ஸ்டார்ட்-அப்கள், 110 யூனிகார்ன்கள் ஆகியவற்றுடன் உலகில் 3-வது பெரிய ஸ்டார்ட்-அப் சூழல் அமைப்பு கொண்ட நாடாக நமது நாடு உருவாகி வருகிறது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இமாச்சலப்பிரதேசம் மண்டியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் 16-வது நிறுவன தின விழாவில் இன்று (24.02.2025)  உரையாற்றிய அவர், இந்த வளர்ச்சி மற்றும் வாய்ப்பின் காலகட்டத்தை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தேசப் பாதுகாப்பு சூழலில், பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பங்களில் கூடுதலான பங்களிப்பை செய்ய வேண்டும் என்று மண்டி ஐஐடி-யை திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். வெடிப்பொருட்கள் உற்பத்தியில் இந்தியா 88 சதவீத தன்னிறவைப் பெற்றிருப்பதாகவும், 2023-24-ல் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி சுமார் 23,000 கோடி ரூபாயை எட்டியிருப்பதாகவும் அவர் கூறினார். 2029-க்குள் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியை ரூ.50,000 கோடியாக உயர்த்துவது நமது இலக்கு என்று அவர் தெரிவித்தார்.

மண்டி ஐஐடி-யின் சாதனைகளுக்காக அதற்குப் பாராட்டு தெரிவித்த திரு ராஜ்நாத் சிங், கடந்த 15 ஆண்டுகளில் இந்த நிறுவனம் கல்வி வரைபடத்தில் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலும் மதிப்புமிகு இடத்தைப் பெற்றுள்ளது என்றார். இது தொன்மையான பாரம்பரியம் மற்றும் நவீன தொழில்நுட்பக் கல்வியின் கலவையாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த நிறுவனம் அமைந்திருக்கும் இடம் கலாச்சார ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் வளமானது என்பது, தொன்மை மற்றும் நவீனத்தின் இணைப்பை அடையாளபடுத்துகிறது என்று அவர் கூறினார்.

இரண்டு புதிய கட்டிடங்களையும், வழிகாட்டி மற்றும் கலந்துரையாடல் மையத்தையும் தொடர் கல்விக்கான மையத்தையும் இந்த நிகழ்வின்போது பாதுகாப்பு அமைச்சர் திறந்து வைத்தார். தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பில் அதிவேகமாக மாறி வரும் உலகில் மாணவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும், அவர்களின் வெற்றியை உறுதி செய்யவும் மிகவும் தேவையான உள்கட்டமைப்பு வசதியை இவை பூர்த்தி செய்யும் என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2105733

***

TS/SMB/RR/DL


(Release ID: 2105910) Visitor Counter : 9


Read this release in: English , Urdu , Hindi