பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பீகார், அசாம் மாநிலங்களுக்குப் பிரதமர் பயணம்

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில் பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார்

பீகார் மாநிலம் பாகல்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து, பிரதமரின் கிசான் திட்டத்தின் 19-வது தவணைத் தொகையைப் பிரதமர் விடுவிக்கிறார்

அசாம் மாநிலம் குவஹாத்தியில் அசாம் 2.0 முதலீடு, உள்கட்டமைப்பு உச்சி மாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார்

அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெறும் ஜுமோயிர் பினாந்தினி (மெகா ஜுமோயிர்) 2025 நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்

Posted On: 22 FEB 2025 2:05PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பீகார் அசாம் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 23 அன்று மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லும் அவர், பிற்பகல் 2 மணியளவில் பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பிப்ரவரி 24 அன்று காலை 10 மணியளவில், போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, அவர் பீகாரின் பாகல்பூருக்குச் செல்கிறார். பிற்பகல் 2:15 மணியளவில், அவர் பிரதமரின் கிசான் திட்டத்தின் 19-வது தவணைத் தொகையை விடுவிக்கிறார். மேலும் பீகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். மேலும் அவர் குவஹாத்திக்குச் சென்று மாலை 6 மணியளவில், ஜுமோயர் பினாந்தினி (மெகா ஜுமோயர்) 2025 நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். பிப்ரவரி 25 அன்று, காலை 10:45 மணிக்கு, குவஹாத்தியில் அட்வான்டேஜ் அசாம் 2.0 முதலீடு, உள்கட்டமைப்பு உச்சி மாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

 

மத்தியப் பிரதேசத்தில் பிரதமர்

சத்தர்பூர் மாவட்டம், கர்ஹா கிராமத்தில் பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறந்த சுகாதார சேவைகளை உறுதி செய்யும் வகையில், ரூ. 200 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இந்த புற்றுநோய் மருத்துவமனை, ஏழை புற்றுநோயாளிகளுக்கு இலவச சிகிச்சையை வழங்கும். மேலும் அதிநவீன இயந்திரங்கள், சிறப்பு மருத்துவர்களைக் கொண்டிருக்கும்.

போபாலில் நடைபெறும் இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025-ஐ-யும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். மத்திய பிரதேசத்தை உலகளாவிய முதலீட்டு மையமாக நிறுவுவதற்கான ஒரு முக்கியமான தளமாக இந்த மாநாடு அமையும். மருந்து, மருத்துவ சாதனங்கள், போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, தொழில், திறன் மேம்பாடு, சுற்றுலா, குரு சிறு நடுத்தர நிறுவனங்கள் போன்றவற்றிற்கான அமர்வு, உலகளாவிய தெற்கு நாடுகளின் அமர்வு, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் அமர்வு போன்ற சர்வதேச அமர்வுகள், முக்கிய பங்குதாரர் நாடுகளுக்கான சிறப்பு அமர்வுகளும் இதில் அடங்கும்.

இந்த மாநாட்டின் போது 3 பெரிய தொழில் கண்காட்சிகள் நடைபெற உள்ளன. இதில் வாகனப் பிரிவில் மத்திய பிரதேசத்தின் வாகன திறன்கள், எதிர்கால போக்குவரத்துத் தீர்வுகள் காட்சிப்படுத்தப்படும். ஜவுளி, ஆடை அலங்காரக் கண்காட்சி பாரம்பரிய, நவீன ஜவுளி உற்பத்தியில் மாநிலத்தின் நிபுணத்துவத்தை எடுத்துரைக்கும். "ஒரு மாவட்டம்-ஒரு தயாரிப்பு" (ODOP) பிரிவு மாநிலத்தின் தனித்துவமான கைவினைத்திறன், கலாச்சாரப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும்.

60-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், பல்வேறு சர்வதேச அமைப்புகளின் அதிகாரிகள், இந்தியாவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட முக்கிய தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

 

பீகாரில் பிரதமர்:

விவசாயிகள் நலனை உறுதி செய்வதில் பிரதமர் உறுதியாக உள்ளார். இதையொட்டி பாகல்பூரில் பல்வேறு முக்கிய முன்முயற்சிகளை அவர் மேற்கொள்ளவுள்ளார். பாகல்பூரில் பிரதமர் கிசான் திட்டத்தின் 19-வது தவணைத் தொகையை அவர் விடுவிப்பார். நாடு முழுவதும் 9.7 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் ரூ .21,500 கோடிக்கும் அதிகமான தொகையை நேரடிப் பரிமாற்றத்தின் மூலம் பெறுவார்கள்.

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு சிறந்த விலை பெறுவதை உறுதி செய்வதில் பிரதமர் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தி வருகிறார். இதைக் கருத்தில் கொண்டு, 2020 பிப்ரவரி 29 அன்று, 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்கி ஊக்குவிப்பதற்கான மத்திய துறைத் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். இந்த அமைப்புகள் விவசாயிகள் தங்களது வேளாண் விளைபொருட்களை கூட்டாக சந்தைப்படுத்தவும், உற்பத்தி செய்யவும் உதவுகின்றன. ஐந்து ஆண்டுகளுக்குள், விவசாயிகளுக்கான பிரதமரின் இந்த உறுதிப்பாடு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நாட்டில் 10,000-வது உழவர் உற்பத்தியாளர் அமைப்பு உருவாக்கப்பட்டதன் மைல்கல்லைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.

தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் மோத்திஹரியில் கட்டப்பட்டுள்ள உள்நாட்டு இனங்களுக்கான சிறப்பு மையத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். அதிநவீன ஐவிஎஃப் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், உள்நாட்டு இனங்களின் சிறந்த கால்நடைகளை உற்பத்தி செய்து இனப்பெருக்கம் செய்தல், விவசாயிகள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு நவீன இனப்பெருக்க தொழில்நுட்பத்தில் பயிற்சி அளித்தல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும். 3 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட சந்தையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட பரோனி பால் உபபொருட்கள் ஆலையையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

போக்குவரத்து இணைப்பு, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, ரூ. 526 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள வாரிசாலிகஞ்ச் – நவாடா – திலையா ரயில் பிரிவு இரட்டை ரயில்பாதை, இஸ்மாயில்பூர் – ரஃபிகஞ்ச் சாலை மேம்பாலம் ஆகியவற்றை  பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

 

அசாமில் பிரதமர்:

அசாம் தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ள பழங்குடியின சமூகங்களின் நாட்டுப்புற நடனமான ஜூமோயிர் நடனத்தில் 8,000 கலைஞர்கள் பங்கேற்கும் கண்கவர் கலாச்சார களியாட்டமான ஜுமோயிர் பினாந்தினி (மெகா ஜுமோயிர்) 2025-ல் பிரதமர் கலந்து கொள்வார். மெகா ஜுமோயிர் நிகழ்வு தேயிலைத் தொழிலின் 200 ஆண்டுகளையும், அசாமில் தொழில்மயமாக்கலின் 200 ஆண்டுகளையும் குறிக்கிறது.

குவஹாத்தியில் 2025 பிப்ரவரி 25 முதல் 26 வரை நடைபெறவுள்ள அட்வான்டேஜ் அசாம் 2.0 முதலீடு, உள்கட்டமைப்பு உச்சி மாநாடு 2025-ஐயும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது தொடக்க அமர்வு, ஏழு அமைச்சக அமர்வுகள், 14 கருப்பொருள் அமர்வுகளை உள்ளடக்கியதாக இருக்கும். தொழில்துறை பரிணாமம், உலகளாவிய வர்த்தக ஒத்துழைப்பு, வளர்ந்து வரும் தொழில்கள், 240 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களைக் கொண்ட துடிப்பான குரு ஸ்ரீ நடுத்தர நிறுவனங்கள் பிரிவு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, மாநிலத்தின் பொருளாதார சூழலை விளக்கும் ஒரு விரிவான கண்காட்சியும் இதில் இடம்பெறும்.

பல்வேறு சர்வதேச அமைப்புகள், உலகளாவிய தொழில்துறைத் தலைவர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை வல்லுநர்கள், புத்மொழில் நிறுவனத்தினர், மாணவர்கள் ஆகியோர் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

***

PLM/DL


(Release ID: 2105486) Visitor Counter : 28