சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மும்பை பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் இருக்கையை அரசு நிறுவ உள்ளது : அரசியல் சட்ட அமிர்தப் பெருவிழா நிகழ்வில் மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தகவல்
Posted On:
20 FEB 2025 4:13PM by PIB Chennai
இந்திய அரசியல் சட்டத்தின் 75-வது ஆண்டினை குறிக்கும் வகையில் மும்பை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அரசியல் சட்ட அமிர்தப் பெருவிழா நிகழ்வில் கூடியிருந்தோர் இடையே மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் உரையாற்றினார். அரசியல் சாசன முதன்மைச் சிற்பியான டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரால் உத்வேகம் பெற்று, சமூகநீதி, சமத்துவம், அதிகாரமளித்தல் ஆகிய சிந்தனைகளை பரவலாக்கி வரும் அரசின் உறுதிபாட்டை அமைச்சர் தமது உரையில் எடுத்துக் காட்டினார்.
டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்புகள் மற்றும் தேசத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வை குறித்த ஆய்வை ஊக்கப்படுத்த மற்ற பல்கலைக்கழகங்களில் இருப்பது போல் மும்பை பல்கலைக்கழகத்திலும் அம்பேத்கர் இருக்கை நிறுவப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். மாணவர்களுக்கு உதவியாக இரண்டு புதிய விடுதிகள் அமைக்கும் திட்டமும் உள்ளது என்று அவர் மேலும் கூறினார். விளிம்பு நிலை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கான பயிற்சி மையம் மும்பை பல்கலைக்கழகத்தில் நிறுவப்படும் என்றும் டாக்டர் வீரேந்திர குமார் தெரிவித்தார்.
டாக்டர் அம்பேத்கர் இதே பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்து நமது அரசியல் சட்டத்தின் சிற்பியாக மாறியது இந்தியாவுக்கான அவரின் தொலைநோக்குப் பார்வைக்கும், அர்ப்பணிப்புக்கும் சான்றாக உள்ளது என்று அமைச்சர் கூறினார். சமூக மற்றும் பொருளாதார ஜனநாயகம் இல்லாமல் அரசியல் ஜனநாயகம் முழுமையடையாது என்ற டாக்டர் அம்பேத்கரின் நம்பிக்கையை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.
இந்த நிகழ்வில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் செயலாளர் திரு அமித் யாதவ், மகாராஷ்டிர மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் திரு சந்திரகாந்த் பாட்டில், மும்பை பலகலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திர குல்கர்னி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2104990
***
TS/SMB/RJ/DL
(Release ID: 2105097)
Visitor Counter : 29