பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நாடாளுமன்ற கேள்வி: பொதுத்துறை மற்றும் அரசு உதவி பெறும் பொதுத்துறை நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்புகள்
Posted On:
13 FEB 2025 3:51PM by PIB Chennai
நாடு முழுவதும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் மற்றும் வேலைவாய்ப்புக்கான திறனை மேம்படுத்துவதற்கும் அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்குதல் திட்டம், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிகளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சாலை, ரெயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், நீர்வழிப்போக்குவரத்து உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாடு மூலமும் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
மேலும் தேசிய தொழில்சேவை இணையதளத்தையும் மத்திய அரசு உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இந்த இணைய தளம் மூலம் தனியார் மற்றும் அரசு துறைகளில் உள்ள வேலைகள், வேலை தொடர்பான கண்காட்சிகள் பற்றிய தகவல்கள், தொழில் ஆலோசனை, திறன் மேம்பாட்டு படிப்புகள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா, உற்பத்தித் துறை, மீன் வளம் போன்ற பல்வேறு துறைகளிலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை 2025-26 மத்திய பட்ஜெட் நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் அமைச்சகங்கள் / துறைகளில் காலியாக உள்ள பதவிகள் தொடர்ச்சியான செயல்முறைகள் மூலம் நிரப்பப்படுகின்றன.
மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்படும் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்கள் (ரோஜ்கர் மேளா) மூலமும் காலியாக உள்ள பதவிகள் இயக்க அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.
இதுவரை பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 14 வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த முகாம்களின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளால் பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2102738
***
TS/GK/AG/KR
(Release ID: 2102805)
Visitor Counter : 37