ஆயுஷ்
யுனானி தினத்தையொட்டி நாளை தில்லியில் ஒருங்கிணைந்த சுகாதார தீர்வுகள் குறித்த சர்வதேச மாநாட்டை குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார்
Posted On:
10 FEB 2025 3:40PM by PIB Chennai
யுனானி தினத்தையொட்டி தில்லியில் நாளை இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைக்கிறார். மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், ஆயுஷ் இணை அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
ஆண்டுதோறும் பிப்ரவரி 11 அன்று, புகழ்பெற்ற யுனானி மருத்துவர், கல்வியாளர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஹக்கீம் அஜ்மல் கானின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில், யுனானி தினம் கொண்டாடப்படுகிறது. மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு முதன்மை ஆராய்ச்சி குழுமமான மத்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சி குழுமம், 2025 பிப்ரவரி 11-12 அன்று புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் "ஒருங்கிணைந்த சுகாதார தீர்வுகளுக்கான யுனானி மருத்துவத்தில் புதுமைக் கண்டுபிடிப்புகள் – முன்னோக்கி செல்லுதல்" என்ற தலைப்பில் புகழ்பெற்ற சர்வதேச மாநாட்டை நடத்துகிறது.
யுனானி மருத்துவ முறையின் வளர்ச்சியையும், பிரதான சுகாதாரப் பராமரிப்பில் ஆயுஷ் முறைகளை ஒருங்கிணைப்பதில் அரசின் கவனத்தையும் எடுத்துரைத்த ஆயுஷ் அமைச்சகத்தின் இணை அமைச்சர், திரு பிரதாப்ராவ் ஜாதவ், "உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பு கட்டமைப்பில் யுனானி மருத்துவம் வளர்ந்து வருவதைக் காண்பதில் தாம் பெருமைப்படுவதாக குறிப்பிட்டார். புதுமைக் கண்டுபிடிப்புகள், ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலம், நவீன சுகாதார சவால்களை எதிர்கொள்ளும் அதே வேளையில், நமது பாரம்பரிய நடைமுறைகளை மதிக்கும் விரிவான சுகாதாரத் தீர்வுகளை முன்வைப்பதை தாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். பொது நலனுக்கும், உலகளாவிய சமூகத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் யுனானி மருத்துவத்தின் வளர்ச்சியை முன்னேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது" என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2101306
***
TS/IR/RJ/RR
(Release ID: 2101420)