ரெயில்வே அமைச்சகம்
தூங்கும் வசதிகொண்ட வந்தேபாரத் ரயில்: வசதியான தொலைதூரப் பயணத்தின் புதிய சகாப்தம் விரைவில் தொடங்குகிறது
Posted On:
06 FEB 2025 7:03PM by PIB Chennai
புதுதில்லி, பிப்ரவரி 06, 2025
தொலைதூரப் பயணத்தில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்த இந்திய ரயில்வே தயாராகி வருகிறது. இதற்காக நாட்டின் அதிவிரைவான நவீன ரயில் போக்குவரத்தை அறிமுகம் செய்யவுள்ளது. தூங்கும் வசதிகொண்ட, உலகத் தரம் வாய்ந்த 16 பெட்டிகளுடன் முதலாவது வந்தே பாரத் ரயில் வண்டிப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. மும்பை-அகமதாபாத் இடையே 540 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்படவுள்ள இதற்கான சோதனைகளை வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் தர அமைப்பு 2025 ஜனவரி 15 அன்று நிறைவு செய்தது. சென்னையில் உள்ள இணைப்பு ரயில்பெட்டி தொழிற்சாலை இந்தியாவின் முதலாவது தூங்கும் வசதிகொண்ட, வந்தே பாரத் ரயில் வண்டியை கடந்த ஆண்டு டிசம்பர் 17 அன்று தயாரித்து முடித்தது. 15 நாட்களுக்குள் இந்த ரயில் கோட்டா கோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு, கடந்த மாதம் முதல் வாரத்தில் 30 முதல் 40 கி.மீ. தூரத்திற்கு 3 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தது. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் வசதியான பயண அனுபவம் இதன் மூலம் உணரப்பட்டது.
வெற்றிகரமான இந்த முன்னோட்டத்தை அடுத்து தூங்கும் வசதிகொண்ட மேலும் 9 வந்தே பாரத் ரயில்களை 2025 ஏப்ரல்-டிசம்பர் மாதங்களுக்கிடையே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வே தொழில்நுட்பத்தில் இந்தியாவின் தற்சார்பை மேலும் வலுப்படுத்த 24 பெட்டிகளை கொண்ட தூங்கும் வசதியுடைய வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பது 2026-27-ல் தொடங்கும்.
16 பெட்டிகளைக் கொண்ட இந்த வந்தே பாரத் ரயில் ஏசி முதல் வகுப்பு, ஏசி இரண்டடுக்கு, ஏசி மூன்றடுக்கு என மூன்று பிரிவுகளைக் கொண்டிருக்கும். இதில் மொத்தமாக 1128 பயணிகள் பயணம் மேற்கொள்ள முடியும்.இந்த ரயில் வண்டி தானியங்கி கதவுகளையும், பயண நேர வைஃபை வசதியையும் கொண்டிருக்கும்.
***
(Release ID: 2100409)
TS/SMB/AG/RR
(Release ID: 2100608)
Visitor Counter : 33