குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்களவையின் 267-வது அமர்வு தொடக்கத்தில் குடியரசுத் தலைவரின் உரை

Posted On: 03 FEB 2025 12:21PM by PIB Chennai

மாண்புமிகு உறுப்பினர்களே, மாநிலங்களவையின் 267-வது அமர்வு இந்திய அரசியலமைப்பு பயணத்தின் ஒரு மைல்கல் ஆகும். 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்புச் சட்டம்  ஏற்றுக்கொள்ளப்பட்டதின் நூறாண்டு நிறைவை நோக்கிய கடைசி கால் நூற்றாண்டுப் பயணத்தின் முதல் கூட்டத்தொடர் இதுவாகும்.

 

தொலைநோக்குப் பார்வையுடன் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய தலைவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. சிறந்த ஞானத்துடனும், தொலைநோக்குப் பார்வையுடனும் வடிவமைக்கப்பட் அரசியலமைப்புச் சட்டம் இந்தியக் குடியரசின் மாண்பை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தியுள்ளது.

 

75 ஆண்டுகால பயணத்தில், காலத்தால் அழியாத நமது ஞானத்தையும், பாரம்பரியத்தையும் கைவிடாமல் நவீனகால மாற்றங்களுககு ஏற்ப தகவமைத்துக் கொண்டுள்ளோம். நம் அனைவரது ஒருங்கிணைந்த கனவுகளும் விருப்பங்களும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள், விண்வெளி ஆய்வு, உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் போன்றவற்றில் நிலையான முன்னேற்றத்தைக் கொண்டு வந்துள்ளன.

 

பாரம்பரியத்துடன் கூடிய வளர்ச்சி என்ற தாரக மந்திரத்துடன் வழி நடத்தப்பட்டு 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை எட்டும் வகையில், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் செயலாற்ற வேண்டியது நம் அனைவரது கடமையாகும்.

 

மாநிலங்களவையில் உள்ள மூத்த உறுப்பினர்கள் நம் அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் செயல்படுவதுடன், முற்போக்கு சிந்தனையுடன் வழிகாட்டிகளாகவும் பணியாற்ற வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய தலைவர்களைப் பின்பற்றி, காலத்தால் அழியாத வரலாற்றை படைக்கும் வகையில் உறுப்பினர்கள் இந்த அவையில் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

அவையில் உறுப்பினர்களின் செயல்பாடுகள் பிறருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். உறுப்பினர்களின் ஆலோசனைகள், அறிவுக்கூர்மை ஆகியவை ஆக்கபூர்வமான வகையில் அமைய வேண்டும். இதன் மூலம் 140 கோடி மக்களின் நலனை மேம்படுத்தும் வகையில் உறுப்பினர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

 

துடிப்பான மற்றும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறும் நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் உயிர்நாடியாகும். புனிதத்துவம் வாய்ந்த நாடாளுமன்ற அவையில் பன்முகத்தன்மையான, திறமையான மற்றும் லட்சிய சமுதாயத்துக்கான விவாதங்கள் இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக நாட்டிற்காக சேவையாற்றும் இளைஞர்கள் தங்களது எல்லையற்ற ஆற்றல் மற்றும் கனவுகளை வெளிப்படுத்த வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, பொறுப்புணர்வு ஆகிய பண்புகளுடன் கூடிய இளைஞர்களை உருவாக்குவதன் மூலம், அனைவரையும் உள்ளடக்கிய நிலையான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

 

நாட்டின் ஆன்மிக மற்றும் கலாச்சாரத்தின் மாண்புகளை எடுத்துரைக்கும் வகையில், மகா கும்பமேளா திகழ்கிறது. இது வேற்றுமையில் ஒற்றுமை என்ற நமது பயணத்திற்கு வலுவான படிப்பினையை வழங்குகிறது. இணைந்து செயலாற்றுவது, நலவாழ்வு, வாய்மை, சகிப்புத்தன்மை, நல்லிணக்கம் ஆகியவற்றில் நாம் உறுதியுடன் இருக்க வேண்டும்.

 

சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்படும்போது, நமது கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதுடன், ஒவ்வொரு குடிமகனின் நல்வாழ்வும், நமது முயற்சிகளின் ஆன்மாவாக இருப்பதை உறதிசெய்கிறது.

 

மாண்புமிகு உறுப்பினர்களே, நமது பணி மகத்தானதாகும், எனவே நாம் உறுதியுடன் பணியாற்ற வேண்டும்.   அவையின் புனிதத்தையும், கண்ணியத்தையும் நிலைநாட்டும் வகையில், உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.  அவையில் நடைபெறும் விவாதங்களும், மேற்கொள்ளப்படும் முடிவுகளும் நாட்டின்  தன்னலமற்ற சேவையின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும். உலக அரங்கில் இந்தியாவின் நிலைப்பாட்டை உயர்த்தும் வகையில்,  கொள்கைகளை உருவாக்குவது மற்றும் அனைத்து பிரிவினைகளையும் கடந்து ஒன்றிணைந்து செயல்படுவோம்.

 

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி என்றழைக்கப்படும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் வார்த்தைகளில் “ஜனநாயகம் என்பது அரசின் வடிவம் மட்டுமின்றி, முதன்மையாக வாழ்க்கை முறையாகும். இதன் அடிப்படையில் சக மனிதர்களுக்கு உரிய மரியாதை அளிப்பதும் சிறந்த அணுகுமுறையாகும்".

 

இந்த அறிவுக்கூர்மையை நாம் எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

இந்தக் கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு தொடங்கும் போது, கண்ணியம், ஒத்துழைப்பு, சட்டப்பூர்வமான தொலைநோக்குப் பார்வையுடன் கோடிக்கணக்கான இதயங்களின் நம்பிக்கையையும், கனவுகளையும் நாம் சுமந்து செல்ல வேண்டும் என்பதை என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும்.

 

நாம் அனைவரும் ஒன்றிணைந்து அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், சிறந்த எதிர்காலத்தை நோக்கிய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099044

***

TS/SV/RJ/KR


(Release ID: 2099096) Visitor Counter : 18


Read this release in: English , Urdu , Hindi , Gujarati