ரெயில்வே அமைச்சகம்
"அற்புதமானது": பட்ஜெட் குறித்து மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கருத்து; பாதுகாப்பில் கவனம் செலுத்தி ரயில்வேக்கு தொடர்ச்சியாக பெரிய அளவில் நிதி ஒதுக்கியதற்காக பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு நன்றி
Posted On:
01 FEB 2025 6:43PM by PIB Chennai
மத்திய பட்ஜெட்டில் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் மூலம், நாடு முழுவதும் வேகமான, பாதுகாப்பான மற்றும் வசதியான ரயில் பயணத்தை விரிவுபடுத்த இந்திய ரயில்வே தயாராக உள்ளது. அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் நாடு 200 புதிய வந்தே பாரத் ரயில்கள், 100 அமிர்த பாரத் ரயில்கள், 50 நமோ பாரத் விரைவு ரயில் மற்றும் 17,500 ஏசி அல்லாத பொது பெட்டிகளை எதிர்பார்க்கலாம்.
இத்தகைய அம்சங்கள் நிறைந்த மத்திய பட்ஜெட்டை "அற்புதம்" என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், 2025-26 நிதியாண்டிற்கான மொத்த பட்ஜெட் ஆதரவாக 2,52,000 கோடி ரூபாயை தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ரயில்வே அமைச்சகத்திற்கு ஒதுக்கியதற்காக பிரதமர் மற்றும் மத்திய நிதியமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். புதிய ரயில்கள் மற்றும் நவீன ரயில் பெட்டிகள் குறைந்த மற்றும் நடுத்தர மக்களுக்கு சேவை செய்வதில் பெரும் பங்கு வகிக்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட் என்பது வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான ஒரு வழிகாட்டி என்று ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரயில்வேயின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நான்கு லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பில் கவனம் செலுத்தி, பல்வேறு திட்டங்கள் மூலம் இந்திய ரயில்வேயின் பாதுகாப்பை அதிகரிக்க இந்த ஆண்டு ஒரு லட்சத்து பதினாறாயிரம் கோடி ரூபாய் செலவினங்களுக்காக பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர், ரயில்வே பவனில் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர், முதலீடு மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவது மட்டுமல்லாமல், வருமான வரிச் சுமையைக் குறைப்பதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு பெரிய நிவாரணத்தையும் இது வழங்குகிறது என்று கூறினார்.
முன்னதாக, இந்திய ரயில்வேக்கு கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட அதே ரூ. 2,52,000 கோடியை ஒதுக்கியதுடன், அதன் செலவுகளைச் சமாளிக்கவும் அதை நவீனமயமாக்கவும் ரூ. 10,000 கோடியை கூடுதல் பட்ஜெட் வளங்களிலிருந்து அரசு ஒதுக்கியது, இதனால் மூலதனச் செலவினம் ரூ. 2,62,000 கோடியாக உயர்ந்தது. நிர்பயா நிதியிலிருந்து ரூ. 200 கோடி ஒதுக்கீடும் பட்ஜெட்டில் உள்ளது. ரயில்வே அதன் உள் வளங்களிலிருந்து கூடுதலாக ரூ. 3,000 கோடி ரூபாயைத் திரட்டும்.
பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பாதைகளில் ரயில்களை இயக்குவதில் ஏற்படும் இழப்புகளுக்கான இழப்பீடு 2025-26 பட்ஜெட் மதிப்பீட்டில் 2739.18 கோடியாக வைக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் 2024-25-ல் 2602.81 கோடியாக இருந்தது.
இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 1.6 பில்லியன் டன் சரக்குகளை ஏற்றிச் செல்லும் இரண்டாவது பெரிய சரக்கு ரயில்வேயாக இந்திய ரயில்வே மாறும் என்று அமைச்சர் கூறினார். அதிவேக ரயில்களில், 2047-ம் ஆண்டுக்குள் மணிக்கு 250 கிலோ மீட்டராக வேகம் அதிகரிக்கப்படும். 7000 கிமீ அதிவேக ரயில் கட்டமைப்பை இந்தியா கொண்டிருக்க இலக்கு வைத்துள்ளது என்று அவர் கூறினார்.
***
(Release ID: 2098714)
PKV/RR/KR
(Release ID: 2098748)
Visitor Counter : 45