சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம தொகுதி ஏலத்தை ரத்து செய்ய சுரங்க அமைச்சகம் முடிவு

Posted On: 23 JAN 2025 4:54PM by PIB Chennai

மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி அவர்களை, தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அம்பலகாரர்கள் (பாரம்பரிய சமூக தலைவர்கள்) புதுதில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம தொகுதியில் அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளமும் பல கலாச்சார பாரம்பரிய தளங்களும் உள்ளன என்று அம்பலகாரர்கள் மத்திய அமைச்சரிடம் தெரிவித்தனர்.

சுரங்க அமைச்சகம் 2024 டிசம்பர் 24 தேதியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், டங்ஸ்டன் தொகுதி ஏல நடைமுறைக்குப் பிறகு, அப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளம் உள்ளது என்ற அடிப்படையில் ஏலத்திற்கு எதிராக கருத்துகள் பெறப்பட்டுள்ளன என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 22.01.2025 அன்று நடைபெற்ற சந்திப்பின் போது, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதி ஏலத்தை ரத்து செய்யுமாறு அப்பகுதி அம்பலகாரர்கள் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்தக் குழுவினரின் கோரிக்கைகளை பொறுமையாகக் கேட்டறிந்த மத்திய அமைச்சர், பல்லுயிர் பாரம்பரிய பாதுகாப்புக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார்.

விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, இப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம தொகுதியின் ஏலத்தை ரத்து செய்ய சுரங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

***

AD/PLM/AG/DL


(Release ID: 2095521) Visitor Counter : 118


Read this release in: English , Urdu , Hindi