சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேசிய சுகாதார இயக்கம் (2021-24) கீழ் படைக்கப்பட்டுள்ள சாதனைகளை மத்திய அமைச்சரவை மதிப்பீடு செய்தது: இது நாட்டின் பொது சுகாதார மேம்பாட்டில் ஏற்பட்டுள்ள தாக்கத்தின் மைல்கல் ஆகும்
Posted On:
22 JAN 2025 2:39PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் தேசிய சுகாதார இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பச்சிளங்குழந்தை இறப்பு விகிதம், கர்ப்பிணிகள் இறப்பு விகிதம், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் மற்றும் மொத்த கருவுறுதல் விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில், காலரா, டெங்கு, காசநோய், தொழுநோய், வைரஸ், மஞ்சள்காமாலை போன்ற பல்வேறு நோய்களுக்கான தடுப்பு திட்டங்கள், தேசிய சிக்கல் செல் இரத்த சோகை நோய் ஒழிப்பு இயக்கம் போன்ற புதிய முயற்சிகள் தொடர்பான திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
மனித வளங்களின் பயன்பாட்டை விரிவுபடுத்துதல், முக்கியத்துவம் வாய்ந்த சுகாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், சுகாதார அவசர நிலைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வை கண்டறிதல், போன்ற தொடர் முயற்சிகள் வாயிலாக நாட்டின் பொது சுகாதார நடவடிக்கைகளின் தாக்கங்களை மேம்படுத்துவதில் தேசிய சுகாதார இயக்கம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், தாய்-சேய் நலன், நோய் ஒழிப்பு, சுகாதார உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் தேசிய சுகாதார இயக்கம் கணிசமான முன்னேற்றத்தை கண்டுள்ளது. இந்த இயக்கத்தின் முயற்சிகள் நாட்டின் சுகாதார மேம்பாட்டு திட்டங்களுடன், குறிப்பாக, கோவிட்-19 தொற்றுநோய் பரவலின் போது ஒருங்கிணைக்கப்பட்டு, நாடு முழுவதும் எளிதில் அணுகக்கூடிய வகையிலும், தரமான சுகாதார சேவைகளை உறுதி செய்யும் வகையிலும் செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன.
சுகாதாரத் துறையில் மனித வளம் கணிசமான அளவில் அதிகரித்திருப்பது தேசிய சுகாதார இயக்கத்தின் முக்கிய சாதனையாகும். 2021-22-ம் நிதியாண்டில், பொது மருத்துவ அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், பிற உதவியாளர்கள், ஆயுஷ் மருத்துவர்கள், தொடர்புடைய சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொது சுகாதார மேலாளர்கள் உட்பட 2.69 லட்சம் கூடுதல் சுகாதாரப் பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த தேசிய சுகாதார இயக்கம் வகை செய்தது. மேலும், 90,740 சமுதாய சுகாதார அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்தது. 2022-23-ம் நிதியாண்டில் 1.29 லட்சம் சமூக சுகாதார மருத்துவர்கள் உட்பட 4.21 லட்சம் கூடுதல் சுகாதார நிபுணர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் 2023-24–ம் நிதியாண்டில் 5.23 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள் பணியாற்றினர். இதில் 1.38 லட்சம் சமூக சுகாதார மருத்துவர்களும் அடங்குவர். இந்த முயற்சிகள் சுகாதார சேவை வழங்கும் நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளன, குறிப்பாக, கோவிட்-19 தொற்று பரவலுக்கு எதிராக பொது சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதில் தேசிய சுகாதார இயக்கம் முக்கிய பங்கு வகித்துள்ளது. தற்போதுள்ள சுகாதார வசதிகள், தொழிலாளர்களின் கட்டமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம், 2021-ம் ஆண்டு ஜனவரி முதல் 2024-ம் ஆண்டு மார்ச் வரை 220 கோடிக்கும் அதிகமான கொவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக, தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்ட கோவிட்-19 அவசரகால தடுப்பு நடவடிக்கைகள், சுகாதார அமைப்புகளின் தயார்நிலை ஆகியவை தொற்றுநோய் பரவலை தடுப்பதில் திறம்பட செயலாற்ற உதவியது.
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், முக்கிய சுகாதார குறியீடுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. பேறுகால இறப்பு விகிதம், 2014-16-ம் ஆண்டில் ஒரு லட்சத்திற்கு 130 ஆக இருந்தது. 2018-20-ம் ஆண்டில் லட்சத்திற்கு 97 என்ற அளவில் கணிசமாகக் குறைந்துள்ளது.
தேசிய நலவாழ்வு குழுமம் பல்வேறு நோய்களை அகற்றுவதிலும், கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் (NTEP) கீழ், இந்நோய் பாதிப்பு 2015-ம் ஆண்டில் 1,00,000 மக்கள்தொகைக்கு 237 ஆக இருந்தது. 2023-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 195 ஆக குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் இறப்பு விகிதம் 28- லிருந்து 22 ஆக குறைந்துள்ளது.
சிறப்பு சுகாதார நடவடிக்கைகளை பொறுத்தவரை, 2022 –ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட பிரதமரின் காசநோய் ஒழிப்புத்திட்டம் 9.40 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு உதவியது. 1,56,572 லட்சம் நி-க்ஷய் மித்ரா தன்னார்வலர்கள் இப்பணியில் இணைந்துள்ளனர் பிரதமரின் தேசிய சிறுநீரக சுத்திகரிப்புத் திட்டமும் (PMNDP) விரிவுபடுத்தப்பட்டுள்ளது, 2023-24-ம் நிதியாண்டில் 62.35 லட்சத்துக்கும் மேற்பட்ட ஹீமோடையாலிசிஸ் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. இது 4.53 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுநீரக பாதிப்பு நோயாளிகளுக்கு பயனளிக்கிறது. மேலும், 2023-ல் தொடங்கப்பட்ட தேசிய அரிவாள் செல் இரத்த சோகை நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் பழங்குடிப் பகுதிகளில் 2.61 கோடிக்கும் அதிகமான நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். 2047 க்குள் அரிவாள் உயிரணு நோயை அகற்றும் இலக்கை நோக்கி இத்திட்டம் செயல்படுகிறது.
டிஜிட்டல் சுகாதார முயற்சிகளும் முக்கிய கவனம் செலுத்துகின்றன. ஜனவரி 2023 இல் யூ-வின்(U-WIN) இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியது, இந்தியா முழுவதும் உள்ள கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசிகள் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. 2023-24 நிதியாண்டின் இறுதியில், இந்த தளம் 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 65 மாவட்டங்களுக்கு விரிவடைந்து, நிகழ்நேர தடுப்பூசி கண்காணிப்பு மற்றும் நோய்த்தடுப்பு பாதுகாப்பை மேம்படுத்துவதை உறுதி செய்தது.
தேசிய தர உத்தரவாத தரநிலைகளின் (NQAS) கீழ் பொது சுகாதார வசதிகளுக்கு சான்றிதழ் உட்பட சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் NHM கவனம் செலுத்தியுள்ளது. மார்ச் 2024 நிலவரப்படி, 7,998 பொது சுகாதார வசதிகள் சான்றளிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 4,200 க்கும் மேற்பட்டவை தேசிய சான்றிதழைப் பெற்றுள்ளன. கூடுதலாக, பலவிதமான சுகாதார சேவைகளை வழங்கும் செயல்பாட்டில் உள்ள ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் (AAM) மையங்களின் எண்ணிக்கை 2023-24 நிதியாண்டின் இறுதிக்குள் 1,72,148 ஆக அதிகரித்துள்ளது, இவற்றில் 1,34,650 மையங்கள் 12 முக்கிய சுகாதார சேவைகளை வழங்குகின்றன.
***
TS/SV/RS/KR/AG/DL
(Release ID: 2095205)
Visitor Counter : 11