சுரங்கங்கள் அமைச்சகம்
மாநில சுரங்க அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் தேசிய மாநாடு - ஒடிசாவின் கோனார்க்கில் மத்திய சுரங்க அமைச்சகம் நடத்துகிறது
Posted On:
19 JAN 2025 5:26PM by PIB Chennai
மத்திய சுரங்க அமைச்சகம், ஒடிசா அரசுடன் இணைந்து, மாநிலங்களின் சுரங்க அமைச்சர்கள் பங்கேற்கும் 3- வது தேசிய மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாடு 2025 ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில் ஒடிசாவில் கோனார்க்கில் நடைபெறுகிறது. இந்த இரண்டு நாள் நிகழ்வில் 16-க்கும் மேற்பட்ட மாநில சுரங்க அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க அமர்வில் ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இதில் சுரங்கத் தொழிலில் மாநிலங்களின் சிறந்த நடைமுறைகள் குறித்த அறிக்கை வெளியிடப்படுகிறது. மாநிலங்களால் செயல்படுத்தப்பட்ட புதுமையான ஆளுகை மாதிரிகளை காட்சிப்படுத்தும் இந்த அறிக்கை, சுரங்க நடைமுறைகளில் செயல்திறனையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுரங்க நடைமுறைகளில் புதுமையை ஊக்குவிக்கும் முயற்சிகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி கடிதங்களும் இந்த மாநாட்டின்போது வழங்கப்படும்.
மேலும் கனிம ஏலம், சுரங்க சீர்திருத்தங்களில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் அவற்றின் சிறப்பான பங்களிப்புக்காக இந்த மாநாட்டில் கௌரவிக்கப்படும்.
சுரங்கத் துறையில் பாதுகாப்பு, நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் கவலைகள், போக்குவரத்து சவால்கள் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த இரண்டு நாள் மாநாட்டில் ஆரோசனைகள் மேற்கொள்ளப்படும்.
***
PLM/KV
(Release ID: 2094366)