தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கு - நாளை தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா
Posted On:
19 JAN 2025 6:43PM by PIB Chennai
மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, நாளை 2025 ஜனவரி 20 புதுதில்லியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார். தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர், ஷோபா கரந்தலஜே தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா ஆகியோரும் இந்த கருத்தரங்கின் தொடக்க அமர்வில் கலந்து கொள்கின்றனர்.
இந்த சர்வதேச உரையாடலை மத்திய தொழிலாளர் நலன் வேலைவாய்ப்பு அமைச்சகம், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (ESIC-இஎஸ்ஐசி), சர்வதேச சமூக பாதுகாப்பு சங்கம் (ISSA) ஆகியவை இணைந்து யஷோபூமி – இந்திய சர்வதேச மாநாடு - கண்காட்சி மையத்தில் ஏற்பாடு செய்துள்ளன.
கொள்கை வகுப்பாளர்கள், சமூக பாதுகாப்பு வல்லுநர்கள், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளைச் சேர்ந்த சமூக பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினரை ஒன்றிணைப்பதை இந்த கருத்தரங்கு நோக்கமாகக் கொண்டுள்ளது.
150 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களை முறைப்படுத்துதல், அவர்களுக்கு சமூக பாதுகாப்பை விரிவுபடுத்துவது போன்றவை தொடர்பான, உத்திகள், தீர்வுகளை பகிர்ந்து கொள்வார்கள். உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச தொழிலாளர் அமைப்பு போன்ற முக்கிய சர்வதேச அமைப்புகளின் மூத்த நிபுணர்களும் இந்த நிகழ்வில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். மத்திய அரசு, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / துறைகளின் மூத்த அதிகாரிகளும் இதில் பங்கேற்பார்கள்.
***
PLM/KV
(Release ID: 2094349)