குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
ஓடிஓபி கண்காட்சி - மகா கும்பமேளாவில் 6000 சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ளது
Posted On:
19 JAN 2025 5:52PM by PIB Chennai
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நாடு முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. பிரயாக்ராஜில் 6000 சதுர மீட்டர் பரப்பளவில் 'ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு' (ODOP-ஓடிஓபி) கண்காட்சி இடம்பெற்றுள்ளது. இதில் உள்ள தரைவிரிப்புகள், ஜரிகை-ஜர்தோசி, ஃபிரோசாபாத்தின் கண்ணாடி பொம்மைகள், வாரணாசியின் மர பொம்மைகள், பிற கைவினைப் பொருட்கள் பக்தர்களை ஈர்க்கின்றன.
காசியைச் (வாரணாசி) சேர்ந்த கைவினைஞர்கள் கண்காட்சியில் மர பொம்மைகள், பனாரசி ப்ரோகேட், உள்ளிட்ட தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். புவிசார் குறியீட்டு நிபுணர் டாக்டர் ரஜினிகாந்த் கூறுகையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 75 புவிசார் குறியீட்டு பொருட்கள் ஓடிஓபி திட்டத்தின் கீழ் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன என்றும், அவற்றில் 34 தயாரிப்புகள் காசி பகுதியைச் சேர்ந்தவை என்றும் குறிப்பிட்டார். வாரணாசியின் சிவப்பு மிளகாய், பனாரசி புடவைகள், சுர்கா கொய்யா, பிரதாப்கரிலிருந்து நெல்லிக்காய், மிர்சாபூரிலிருந்து பித்தளை பாத்திரங்கள், கோரக்பூரின் டெரகோட்டா பொருட்கள் ஆகியவை இதில் அடங்கும். குஷிநகரின் தரைவிரிப்புகள், ஃபிரோசாபாத்திலிருந்து கண்ணாடி பொம்மைகள், பாத்திரங்களும் கண்காட்சியில் முக்கிய ஈர்ப்புகளாக உள்ளன.
மகா கும்பமேளா- 2025 ஆன்மீக, கலாச்சார அடையாளத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், தொழில்முனைவோருக்கான ஒரு பரந்த தளமாகவும் மாறியுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து இங்கு வரும் மக்கள் கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகளைப் பார்வையிட்டு, வாங்கிப் பாராட்டுகிறார்கள்.
***
PLM/KV
(Release ID: 2094341)
Visitor Counter : 33