பிரதமர் அலுவலகம்
நவி மும்பையில் இஸ்கானின் ஸ்ரீ ஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி கோவிலை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்
உலகெங்கிலும் பரவியுள்ள இஸ்கான் அமைப்பை பின்பற்றுபவர்கள் கிருஷ்ணர் மீதான பக்தியால் பிணைக்கப்பட்டுள்ளனர். இது அனைவரையும் ஒருங்கிணைப்பதுடன் நல்வழிப் படுத்துகிறது. இது ஸ்ரீல பிரபுபாத சுவாமியின் எண்ணங்களின் சூத்திரமாகும்: பிரதமர்
இந்தியா என்பது புவிசார் எல்லைகளால் சூழப்பட்ட நிலம் மட்டுமின்றி வாழும் நிலமாக, வாழும் கலாச்சாரமாக உள்ளது. இந்த கலாச்சாரத்தின் மனசாட்சி ஆன்மீகம்; இந்தியாவைப் புரிந்து கொள்வதற்கு ஆன்மீக நெறிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும்:பிரதமர்
நமது ஆன்மீக கலாச்சாரத்தின் அடித்தளமாக சேவை மனப்பான்மை திகழ்கிறது:பிரதமர்
Posted On:
15 JAN 2025 5:49PM by PIB Chennai
நவி மும்பை, கார்கரில் ஸ்ரீ ஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி ஆலயத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இதுபோன்ற ஒரு தெய்வீக விழாவில் பங்கேற்பது தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றும், ஸ்ரீல பிரபுபாத சுவாமியின் ஆசிகளுடன் இஸ்கான் துறவிகளின் மகத்தான பாசத்தையும் அரவணைப்பையும் தாம் பெற்றுள்ளதாக கூறினார். மதிப்பிற்குரிய அனைத்து துறவிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். ஆன்மீகம் மற்றும் அறிவின் முழுமையான பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் ஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி கோயில் வளாகத்தின் வடிவமைப்பு குறித்து அவர் எடுத்துரைத்தார். 'ஏகோ அஹம் பஹு சியாம்' என்ற கருத்தை வெளிப்படுத்தும் தெய்வீகத்தின் பல்வேறு வடிவங்களை இந்தக் கோயில் காட்சிப்படுத்துவதாக உள்ளது என்று அவர் மேலும் கூறினார். புதிய தலைமுறையினரின் ஆர்வம், விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் ராமாயணம், மகாபாரதம் போன்ற காப்பியங்களை அடிப்படையாகக் கொண்ட அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். கூடுதலாக, பிருந்தாவனத்தின் 12 காடுகளால் ஒரு தோட்டம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த கோயில் வளாகம் நம்பிக்கையுடன் இந்தியாவின் உணர்வையும் வளப்படுத்தும் புனித மையமாக உருவெடுக்கும் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்தார். இந்த உன்னத முயற்சிக்காக இஸ்கான் அமைப்பின் அனைத்து துறவிகள், உறுப்பினர்கள், மகாராஷ்டிர மக்களுக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மதிப்பிற்குரிய கோபால கிருஷ்ண கோஸ்வாமி மகராஜை நினைவுகூர்ந்த திரு மோடி, பகவான் கிருஷ்ணர் மீதான அவரது ஆழ்ந்த பக்தியில் வேரூன்றியுள்ள மகாராஜின் தொலைநோக்குப் பார்வையும் ஆசிகளும் இந்தத் திட்டத்திற்கு கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டார். மகராஜ் நேரில் வரவில்லை என்றாலும், அவரது ஆன்மீக இருப்பு அனைவராலும் உணரப்பட்டதாக அவர் கூறினார். மகராஜின் அன்பு, நினைவுகள் தனது வாழ்க்கையில் பெற்றுள்ள சிறப்பான இடத்தை பிரதமர் எடுத்துரைத்தார். ஸ்ரீல பிரபுபாதரின் 125-வது பிறந்த நாளின் போது உலகின் மிகப்பெரிய கீதையை திறந்து வைக்க மகராஜால் அழைக்கப்பட்டதையும், அவரது வழிகாட்டுதலைப் பெற்றதையும் அவர் நினைவு கூர்ந்தார். மகராஜின் மற்றொரு கனவை நனவாக்கியதில் பிரதமர் திருப்தி தெரிவித்தார்.
உலகெங்கிலும் உள்ள இஸ்கான் அமைப்பை பின்பற்றுபவர்கள் கிருஷ்ணர் மீதான பக்தியால் ஒன்றுபட்டுள்ளனர் என்று கூறிய திரு மோடி, பக்தர்களுக்கு 24/7 என எப்போதும் வழிகாட்டுவதாக ஸ்ரீல பிரபுபாத சுவாமியின் போதனைகள் உள்ளன என்று எடுத்துரைத்தார். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் போது வேதங்கள், வேதாந்தம், கீதை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ஸ்ரீல பிரபுபாத சுவாமி ஊக்குவித்ததாகவும், பக்தி வேதாந்தத்தை சாமானிய மக்களின் உணர்வுடன் இணைத்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார். 70 வயதில், பெரும்பாலான மக்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றியதாகக் கருதும் போது, ஸ்ரீல பிரபுபாத சுவாமி இஸ்கான் இயக்கத்தைத் தொடங்கி, உலகம் முழுவதும் பயணம் செய்து, பகவான் கிருஷ்ணரின் செய்தியை உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரப்பியதாக அவர் கூறினார். அவரது அர்ப்பணிப்பால் இன்று உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் பயனடைகிறார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், ஸ்ரீல பிரபுபாத சுவாமியின் தீவிர முயற்சிகள் நம்மை தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக தெரிவித்தார்.
இந்தியா ஒரு அசாதாரணமான, அற்புதமான புவியியல் எல்லைகளால் பிணைக்கப்பட்ட ஒரு நிலமாக மட்டுமின்றி, மேம்பட்ட கலாச்சாரத்துடன் வாழும் நிலப்பகுதி என்று பிரதமர் புகழாரம் சூட்டினார். இந்தக் கலாச்சாரத்தின் சாரம் ஆன்மீகம் என்று வலியுறுத்திய பிரதமர், இந்தியாவைப் புரிந்துகொள்ள ஒருவர் முதலில் ஆன்மீகத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். உலகைப் பொருளியல் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்ப்பவர்கள், இந்தியாவை பல்வேறு மொழிகள், மாகாணங்களின் தொகுப்பாக பார்க்கிறார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார். எனினும், ஒருவர் தங்கள் ஆன்மாவை இந்தக் கலாச்சார உணர்வுடன் இணைக்கும் போது, அவர்கள் உண்மையிலேயே இந்தியாவைக் காண்கிறார்கள் என்று அவர் கூறினார். கிழக்குப் பகுதியில் சைதன்ய மஹாபிரபு போன்ற துறவிகள் வங்காளத்திலும், மேற்கில் நாமதேவர், துக்காராம், தியானேஸ்வர் போன்ற துறவிகள் மகாராஷ்டிரத்திலும் தோன்றினர் என்பதை அவர் எடுத்துரைத்தார். சைதன்ய மஹாபிரபு மகாவாக்கிய மந்திரத்தை மக்களிடையே பரப்பினார் என்றும், மகாராஷ்டிரத்தின் துறவிகள் 'ராமகிருஷ்ண ஹரி' மந்திரத்தின் மூலம் ஆன்மீக அமிர்தத்தைப் பகிர்ந்து கொண்டனர் என்றும் திரு மோடி குறிப்பிட்டார். தியானேஸ்வரி கீதை வாயிலாக பகவான் கிருஷ்ணரைப் பற்றிய ஆழமான அறிவை துறவி தியானேஸ்வர் வெளிக்கொணர்ந்தார் என்றும் அவர் கூறினார். இதேபோல், ஸ்ரீல பிரபுபாதர் இஸ்கான் மூலம் கீதையை பிரபலப்படுத்தியதுடன், வர்ணனைகளை வெளியிட்டு அதன் சாரத்துடன் மக்களை இணைத்தார். வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு காலகட்டங்களில் பிறந்த இந்த துறவிகள் ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவமான வழிகளில் கிருஷ்ண பக்தியை முன்னெடுத்துச் செல்வதாக பிரதமர் குறிப்பிட்டார். பிறந்த காலம், மொழி, வழிமுறைகள் ஆகியவற்றில் வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், அவர்களின் புரிதல், எண்ணம், உணர்வு ஆகியவை ஒன்றாகவே உள்ளது என்றும், அவர்கள் அனைவரும் பக்தி என்ற ஒளியால் சமூகத்திற்கு புதிய உயிரோட்டத்தை அளித்து, புதிய திசையையும் ஆற்றலையும் அளித்தனர் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் ஆன்மீக கலாச்சாரத்தின் அடித்தளம் சேவை மனப்பான்மையே என்று குறிப்பிட்ட திரு மோடி, ஆன்மீகத்தில், கடவுளுக்கு சேவை செய்வதும், மக்களுக்கு சேவை செய்வதும் ஒன்றுதான் என்பதை வலியுறுத்தினார். இந்தியாவின் ஆன்மீக கலாச்சாரம் சமூகத்துடன் இணைத்து, கருணையை வளர்த்து, சேவையை நோக்கி அவர்களை வழிநடத்தி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். உண்மையான சேவை என்பது தன்னலமற்றது என்று பொருள்படும் ஸ்ரீ கிருஷ்ணரின் மந்திரத்தை மேற்கோள் காட்டிய பிரதமர், அனைத்து மத நூல்களும், புனித நூல்களும் சேவை மனப்பான்மையுடன் வேரூன்றியவை என்றார். இஸ்கான் என்ற மாபெரும் அமைப்பு, இந்த சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழலுக்கு பங்களித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். கும்பமேளாவில் இஸ்கான் குறிப்பிடத்தக்க சேவை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
அதே சேவை மனப்பான்மையுடன் மக்களின் நலனுக்காக அரசு தொடர்ந்து பணியாற்றி வருவது குறித்து பிரதமர் திருப்தி தெரிவித்தார். ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறைகள் கட்டுவது, உஜ்வாலா திட்டத்தின் மூலம் ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குதல், ஒவ்வொரு வீட்டிலும் குழாய் மூலம் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்தல், ஒவ்வொரு ஏழைக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பது, 70 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு மூத்த குடிமக்களுக்கும் இந்த மருத்துவ வசதியை விரிவுபடுத்துவது, வீடற்ற ஒவ்வொரு நபருக்கும் உறுதியான வீடுகளை வழங்குவது ஆகியவை இந்த சேவை உணர்வால் உந்தப்பட்ட நடவடிக்கைகள் என்று அவர் குறிப்பிட்டார். இந்த சேவை உணர்வு உண்மையான சமூக நீதியை கொண்டு வருவதாகவும், இது உண்மையான மதச்சார்பின்மையின் அடையாளமாகும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
கிருஷ்ணா சுற்றுச்சாலை அமைப்பதன் மூலம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு புனித தலங்கள், மத வழிபாட்டுத் தலங்களை மத்திய அரசு இணைத்து வருவதை சுட்டிக் காட்டிய திரு மோடி, இந்த சுற்றுச்சாலை குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கும் விரிவடைந்துள்ளது என்றார். உள்நாட்டு தரிசனம் மற்றும் பிரசாத் திட்டங்களின் கீழ் இந்த தளங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்தக் கோயில்கள் கிருஷ்ணரின் குழந்தை வடிவத்தில் இருந்து ராதா ராணியுடன் அவர் வழிபாடு செய்வது, அவரது கர்மயோகி வடிவம் மற்றும் ஒரு அரசராக அவரது வழிபாடு வரை கிருஷ்ணரின் பல்வேறு வடிவங்களை வெளிப்படுத்துகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய பல்வேறு இடங்கள் மற்றும் கோயில்களுக்கு எளிதாக செல்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என்று அவர் கூறினார். இந்த நோக்கத்திற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கிருஷ்ணா சுற்றுச்சாலையுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த நம்பிக்கை மையங்களுக்கு பக்தர்களை அழைத்து வர இஸ்கான் உதவிட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். தங்கள் மையங்களுடன் தொடர்புடைய அனைத்து பக்தர்களையும் இந்தியாவில் இதுபோன்ற குறைந்தது ஐந்து இடங்களுக்குச் செல்ல இஸ்கான் அமைப்பு ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கடந்த பத்தாண்டுகளில் வளர்ச்சி, பாரம்பரியத்தில் ஒரே நேரத்தில் நாடு முன்னேற்றம் கண்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், பாரம்பரியத்தின் மூலம் வளர்ச்சி என்ற இந்த இயக்கத்திற்கு இஸ்கான் போன்ற நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை எடுத்துரைத்தார். கோயில்களும், மத வழிபாட்டுத் தலங்களும் பல நூற்றாண்டுகளாக சமூக உணர்வின் மையங்களாகத் திகழ்கின்றன என்று குறிப்பிட்ட பிரதமர், கல்வி, திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதில் குருகுலங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன என்றார். இஸ்கான் அமைப்பு தனது திட்டங்கள் மூலம் இளைஞர்களிடையே ஆன்மீகத்தை தங்களது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்றியமைக்க உத்வேகத்துடன் சேவையாற்றுகிறதுஎன்று அவர் தெரிவித்தார். இஸ்கான் அமைப்பின் வழிகாட்டுதலின் கீழ், இளைஞர்கள் சேவை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் தேச நலனுக்காக பணியாற்றுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். கோயில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கல்விக்கான பக்திவேதாந்த ஆயுர்வேத சிகிச்சை மையம் மற்றும் வேதக் கல்விக்கான பக்திவேதாந்தா கல்லூரி ஆகியவை சமுதாயத்திற்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் பயனளிக்கும் என்று திரு மோடி எடுத்துரைத்தார். 'இந்தியாவில் குணமடைவோம்' என்ற அழைப்பையும் அவர் வலியுறுத்தினார்.
சமூகம் மிகவும் நவீனமடையும் போது, அதற்கான கூடுதல் கருணை உணர்வு தேவை என்று திரு மோடி குறிப்பிட்டார். மனிதப் பண்புகள், சொந்தம் என்ற உணர்வுடன் முன்னேற்றமடைவதற்கான உணர்திறன் வாய்ந்த தனிநபர்களைக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இஸ்கான் அமைப்பு தனது பக்தி வேதாந்தத்தின் மூலம் உலக அளவில் உணர்திறனுக்கு புதிய உயிர் கொடுத்து, மனித மாண்புகளை உலகளவில் விரிவுபடுத்த முடியும் என்று பிரதமர் எடுத்துரைத்தார். ஸ்ரீல பிரபுபாத சுவாமியின் கொள்கைகளை இஸ்கான் அமைப்பின் தலைவர்கள் தொடர்ந்து நிலைநிறுத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்து தனது உரையை பிரதமர் நிறைவு செய்தார் .ராதா மதன்மோகன்ஜி கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு இஸ்கான் குடும்பத்தினர்களுக்கும் அனைத்து மக்களுக்கும் அவர் மீண்டும் வாழ்த்து தெரிவித்தார்.
மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர பட்னாவிஸ், மகாராஷ்டிர துணை முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
நவி மும்பையின் கார்கரில் உள்ள இஸ்கான் திட்டமான ஸ்ரீ ஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி கோயில் ஒன்பது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் பல தெய்வங்களைக் கொண்ட ஒரு கோயிலாகும். வேதக் கல்வி மையம், அருங்காட்சியகங்கள், அரங்குகள், சிகிச்சைக்கான மையம் ஆகியவை அடங்கும். வேத போதனைகள் மூலம் உலகளாவிய சகோதரத்துவம், அமைதி, நல்லிணக்கத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
---
TS/SV/KPG/DL
(Release ID: 2093195)
Visitor Counter : 13