பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அடித்தள அளவில் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக 'விக்சித் பஞ்சாயத்து கர்மயோகி' முன்முயற்சியை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்

நீண்டகால அடிப்படையில் சிறந்த மாற்றத்தைக் கொண்டுவர நிர்வாக சீர்திருத்தங்கள் அடிமட்டத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும் - மத்திய இணைய மைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 25 DEC 2024 3:46PM by PIB Chennai

அடிமட்ட அளவில் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100 வது பிறந்த நாளைக் குறிக்கும் நல்லாட்சி தினத்தன்று 'விக்சித் பஞ்சாயத்து கர்மயோகி' முன்முயற்சியை மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.

பரந்த 'பிரஷசன் கான் கி அவுர்' இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த முயற்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அதிகாரிகளை பயனுள்ள ஆளுகைக்கும் பங்கேற்பு திட்டமிடலுக்கும் தேவையான அறிவுடன் தயார்படுத்தும். இதன் மூலம் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் திறன் மேம்படும்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், நீண்டகால அடிப்படையில், சிறந்த மாற்றத்தைக் கொண்டுவரவும், திறன் இடைவெளிகளை நிரப்பவும் நிர்வாக சீர்திருத்தங்கள் அடிமட்டத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். "விக்சித் பஞ்சாயத்து கர்மயோகி" முன்முயற்சி புதுமையான முயற்சிகள் மூலம் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது என்று அவர் கூறினார்.

ஒடிசா, அசாம், குஜராத், ஆந்திராவில் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, அறிவு இடைவெளிகளைக் குறைக்கவும், சேவை வழங்கலை மேம்படுத்தவும் மின்-கற்றல் தளங்கள், செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளைப் பயன்படுத்துகிறது என்று அமைச்சர் கூறினார்.

நல் ஆளுமை தினத்தைக் குறிக்கும் வகையில் டாக்டர் ஜிதேந்திர சிங், செயல்திறன், வெளிப்படைத்தன்மை, மக்களை மையமாகக் கொண்ட ஆளுமை ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட  மாற்றத்துக்கான ஐந்து முக்கிய முன்முயற்சிகளையும் தொடங்கி வைத்தார்.

---

PLM/DL


(Release ID: 2087931) Visitor Counter : 22