ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய நீர் மேம்பாட்டு முகமை யின் 38-வது வருடாந்திர பொதுக் கூட்டம் மற்றும் நதிகள் இணைப்புக்கான சிறப்புக் குழுவின் 22-வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது

Posted On: 20 DEC 2024 10:20AM by PIB Chennai

தேசிய நீர் மேம்பாட்டு முகமை யின் 38-வது வருடாந்திர பொதுக் கூட்டமும், நதிகள் இணைப்புக்கான சிறப்புக் குழுவின் 22-வது கூட்டமும் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு. சி.ஆர். பாட்டீல் தலைமையில் நடைபெற்றன. மாற்றியமைக்கப்பட்ட பர்பதி – காளிசிந்த்-சம்பல் திட்டம் மற்றும் கென் பெட்வா இணைப்புத் திட்டம் ஆகியவற்றில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திரு சி.ஆர்.பாட்டீல் எடுத்துரைத்தார். ராஜஸ்தானின் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவிற்காக ஜெய்ப்பூரில் சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றியும் மாற்றியமைக்கப்பட்ட பர்பதி – காளிசிந்த்-சம்பல் இணைப்புத் திட்டத்தின் உடன்படிக்கை ஒப்பந்தம் பற்றியும் அவர் விளக்கினார்.அதே நேரத்தில், நமது நாட்டின் வளர்ச்சியில் மேலும் முன்னேற்றம் காண மற்ற மாநிலங்களும் தங்களது இணைப்புத் திட்டங்களில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நதிகள் இணைப்புத் திட்டத்தில் சமீப ஆண்டுகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை மத்திய நீர்வள ஆதாரத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் கோடிட்டுக் காட்டினார். குறிப்பாக, செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய தொலைநோக்குத் திட்டத்தின் முதல் இணைப்பான கென்-பெட்வா இணைப்புத் திட்டம் பற்றி அவர் குறிப்பிட்டார். நீர்வள மேலாண்மை மத்திய அரசின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது என்றும், நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு அரசு உயர் முன்னுரிமை அளித்து வருவதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.

பல்வேறு பணிகளின் நிலை, நிலுவையில் உள்ள பிரச்சினைகள்/தடைகள், தேசிய நீர் மேம்பாட்டு முகமையின் 2023-24-ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான இணைப்புகள் குறித்து விரிவாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பல்வேறு மாநில அரசுகளின் பிரதிநிதிகள் நதிநீர் இணைப்புத் திட்டங்கள் குறித்து தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

மத்திய ஜல் சக்தித் துறை இணை அமைச்சர் திரு ராஜ் பூஷண் சவுத்ரி, பீகார் நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் திரு விஜய் குமார் சவுத்ரி, உத்தரப்பிரதேச நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் திரு ஸ்வதந்திர தேவ் சிங் மற்றும் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் திரு கே லட்சுமி நாராயணன் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கேரள நீர்வள ஆதாரத் துறைஅமைச்சர் திரு. ரோஷி அகஸ்டின், ஹரியானா நீர்வள ஆதாரத் துறை அமைச்சர் திருமதி ஸ்ருதி சவுத்ரி மற்றும் குஜராத்  நீர்வள ஆதாரத் துறை அமைச்சர் திரு. குன்வர்ஜிபாய் பவாலியா ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

***

(Release ID: 2086309)
TS/BR/RR/KR

 


(Release ID: 2086365) Visitor Counter : 45