ரெயில்வே அமைச்சகம்
10 வந்தே பாரத் படுக்கை வசதி ரயில்கள் தயாரிப்பு நிலையில் உள்ளன: மத்திய அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ்
Posted On:
18 DEC 2024 7:29PM by PIB Chennai
தற்போது, நாட்டில் நீண்ட மற்றும் நடுத்தர தூர பயணங்களுக்காக 10 வந்தே பாரத் படுக்கை வசதி ரயில்கள் தயாரிப்பில் உள்ளன. முதல் முன்மாதிரி தயாரிக்கப்பட்டுள்ளது. கள சோதனைகளுக்கு இவை உட்படுத்தப்படும். மேலும், 200 வந்தே பாரத் படுக்கை வசதி அடுக்குகள் தயாரிப்பும் தொழில்நுட்ப கூட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 02, 2024 நிலவரப்படி, நாடு முழுவதும் குறுகிய மற்றும் நடுத்தர தூர பயணத்திற்காக இந்திய ரயில்வேயின் மின்மயமாக்கப்பட்ட அகல ரயில்பாதை இணைப்பில் 136 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மக்களவையில் சமர்ப்பித்த அறிக்கையில், உலகத் தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்குவதற்காக, இந்திய ரயில்வேயின் மின்மயமாக்கப்பட்ட அகல ரயில் இணைப்பில் இருக்கை வசதிகளைக் கொண்ட 136 வந்தே பாரத் ரயில் சேவைகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன; அக்டோபர் 2024 வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் ஒட்டுமொத்த இருக்கைகள் 100% நிரம்பி இருந்தன.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர், இந்திய ரயில்வேயின் உற்பத்திப் பிரிவுகள் 2018 ஏப்ரல் முதல் எல்.ஹெச்.பி பெட்டிகளை மட்டுமே உற்பத்தி செய்கின்றன என்றார். கடந்த சில ஆண்டுகளாக எல்.ஹெச்.பி ரயில் பெட்டிகளின் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2014-24 ஆம் காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட எல்.ஹெச்.பி பெட்டிகளின் எண்ணிக்கை 36,933 ஆகும் . 2004-14 ஆம் காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட எண்ணிக்கையான 2,337 என்பதோடு ஒப்பிட இது 16 மடங்கு அதிகமாகும். இந்திய ரயில்வே தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட எல்.ஹெச்.பி பெட்டிகளை பெருக்கியுள்ளது
அணுகக்கூடிய இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடமாட்டம் சிரமமாக உள்ள பயணிகளின் அணுகலை உறுதி செய்வதில் இந்திய ரயில்வே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 வழிகாட்டுதல்களின் கீழ், சாய்வுதளம், அணுகக்கூடிய பார்க்கிங், பிரெய்லி மற்றும் தொட்டுணரக்கூடிய அறிவிப்புப் பலகைகள், குறைந்த உயரம் கொண்ட கவுண்டர்கள் மற்றும் மின்தூக்கி/ நகரும் படிகள் போன்ற விரிவான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. நவம்பர் 2024 வரை, இந்திய ரயில்வே 399 நிலையங்களில் 1,512 நகரும் படிகளையும், 609 நிலையங்களில் 1,607 மின்தூக்கிகளையும் நிறுவியுள்ளது. இது முந்தைய தசாப்தத்துடன் ஒப்பிடும்போது முறையே 9 மற்றும் 14 மடங்கு வளர்ச்சியைக் குறிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2085798
***
TS/BR/RR
(Release ID: 2085937)
Visitor Counter : 19