ஊரக வளர்ச்சி அமைச்சகம்
கிராமப்புறங்களில் வீடற்ற மக்களுக்கு வசதிகள்
Posted On:
17 DEC 2024 4:11PM by PIB Chennai
ஊரகப் பகுதிகளில் "அனைவருக்கும் வீடு" என்ற நோக்கத்தை அடையும் வகையில், அடிப்படை வசதிகளுடன் கூடிய உறுதியான வீடுகளைக் கட்டுவதற்கு தகுதி வாய்ந்த கிராமப்புற குடும்பங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக, பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம், 2016 ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஆரம்ப இலக்கு 2016-17 முதல் 2023-24 வரை 2.95 கோடி வீடுகளைக் கட்டுவதாகும். மேலும் 13.12.2024 நிலவரப்படி, 2.68 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2024-25 முதல் 2028-29 நிதியாண்டு வரை மேலும் 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு சமவெளிப் பகுதிகளில் ரூ.1.20 லட்சமும், வடகிழக்கு பிராந்திய மாநிலங்கள் மற்றும் 2 மலை மாநிலங்கள் (இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட்) மற்றும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.1.30 லட்சமும் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தவிர, கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அல்லது வேறு ஏதேனும் அர்ப்பணிக்கப்பட்ட நிதி ஆதாரத்துடன் ஒருங்கிணைந்து தனிநபர் கழிப்பறைகள் கட்டுவதற்கு ரூ.12,000/- நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துடன் ஒருங்கிணைந்து, வீட்டுவசதி திட்டப் பயனாளிக்கு அவரது வீட்டைக் கட்டுவதற்கு தற்போதைய விகிதங்களில் (தோராயமாக ரூ. 27,000) 90/95 மனித நாட்கள் திறன்சாரா ஊதியத்துடன் பணியாளர்களை ஒதுக்கித் தருவது கட்டாயமாகும்.இந்தத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள குடும்பங்களுக்கு தண்ணீர், திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) மற்றும் மின்சார இணைப்புகள் ஆகியன பிற தொடர்புடைய திட்டங்களுடன் ஒன்றிணைந்து வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ், 2024-25 நிதியாண்டில் 40 லட்சம் வீடுகளை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 13.12.2024 நிலவரப்படி, 37.80 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 27.63 லட்சம் பயனாளிகளுக்கு மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி இத்தகவலை தெரிவித்தார்.
***
TS/PKV/AG/DL
(Release ID: 2085437)
Visitor Counter : 23