உள்துறை அமைச்சகம்
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் நடைபெற்ற பஸ்தார் ஒலிம்பிக் நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்
Posted On:
15 DEC 2024 8:03PM by PIB Chennai
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் நடைபெற்ற பஸ்தார் ஒலிம்பிக் நிறைவு விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு. விஷ்ணு தியோ சாய், துணை முதலமைச்சர் திரு. விஜய் சர்மா மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, பஸ்தார் ஒலிம்பிக் போட்டிகள் கூடியுள்ள 1,50,000 குழந்தைகளுக்கு மட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள ஏழு மாவட்டங்களுக்கும் நம்பிக்கையின் அடையாளமாக மாறும் என்று கூறினார். வரவிருக்கும் நாட்களில் பஸ்தார் ஒலிம்பிக் போட்டி, பஸ்தாரின் வளர்ச்சியின் ஒரு கதையாக மாறும் என்றும் நக்சலிசத்திற்கு ஒரு தீர்க்கமான எதிர்ப்பாக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பஸ்தார் ஒலிம்பிக் போட்டிகளின் நேர்மறை சக்தி, லட்சக்கணக்கான பழங்குடியின இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதைத் தடுக்கும், இந்தியாவைக் கட்டமைக்கும் செயல்முறையில் அவர்களை இணைக்கும், மேலும் லட்சக்கணக்கான கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்களின் நலனுக்கான வழிமுறையாக மாறும் என்று அவர் மேலும் கூறினார். பஸ்தார் ஒலிம்பிக் போட்டி, இந்த மண்டலத்தில் அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் புதிய நம்பிக்கைகளுக்கு அடித்தளம் அமைக்கும் என்று திரு ஷா மேலும் கூறினார். சர்வதேச போட்டிகளில் இந்தியா வெல்லும் பதக்கங்களில் பாதியை பழங்குடியின குடும்பங்களைச் சேர்ந்த நமது குழந்தைகள் கொண்டு வருகிறார்கள். பஸ்தார் ஒலிம்பிக் போட்டிகளும், அவற்றின் மூலம் தொடங்கப்பட்டுள்ள வளர்ச்சியும், வரும் நாட்களில் பஸ்தார் பழங்குடியினக் குழந்தைகளுக்கு உலகின் எல்லைகளைத் திறக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் சக்கர நாற்காலி பந்தயம், பஸ்தாரின் வளர்ச்சியின் வேகத்தின் அடையாளமாக மாறும் என்று அவர் கூறினார்.
நக்சலைட்டுகள் வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சமூகத்தின் பிரதான பகுதியுடன் இணைய வேண்டும் என்றும், வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் சென்று சத்தீஸ்கரின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார். சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த சத்தீஸ்கர் அரசு உறுதிபூண்டுள்ளது என்று திரு ஷா மேலும் கூறினார். கிராமங்களை சொர்க்கமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை அவர் எடுத்துரைத்தார்.
கடந்த 10 ஆண்டுகளில், திரு மோடி அரசு நக்சலிசத்தை இரண்டு முனைகளில் கையாண்டுள்ளது என்று திரு அமித் ஷா எடுத்துரைத்தார். ஒருபுறம் வன்முறையில் ஈடுபடும் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு, அவர்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மறுபுறம் சரணடைந்த நக்சலைட்டுகளுக்கு மறுவாழ்வு அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றார் அவர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2084648
***
VL/BR/RR
(Release ID: 2084717)
Visitor Counter : 26