எரிசக்தி அமைச்சகம்
மின்துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் குழு கூட்டம்- மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் தலைமையில் நடைபெற்றது
Posted On:
04 DEC 2024 9:43AM by PIB Chennai
மின்துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் புதுதில்லியில் நேற்று (03.12.2024) மாலை நடைபெற்றது.
மத்திய மின் துறை அமைச்சர் திரு மனோகர் லால் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். மத்திய மின்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் குழுவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தேசிய மின் திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் மின்துறை முக்கிய பங்கு வகிக்கும் என்று அமைச்சர் திரு மனோகர் லால் குறிப்பிட்டார். மின்சாரத்தின் தேவை அதிகரித்து வரும் நிலையில், உற்பத்தியையும் அதிகரிப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். கார்பன் வெளியேற்றம் இல்லாத நிலையை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய அவர், புதைபடிவம் அல்லாத எரிசக்தி ஆதாரங்களில் கவனம் செலுத்தப்படும் என்று கூறினார்.
கூட்டத்தில் பேசிய இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக், தேசிய வளர்ச்சி நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடையும் பாதையில் உள்ளது என்றும் கூறினார். எரிசக்தித் துறையில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கூட்டத்தின் நிறைவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த ஆலோசனைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் திரு மனோகர் லால் தெரிவித்தார்.
************
TS/PLM/AG/KV
(Release ID: 2080525)